திருவண்ணாமலை: தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், திறக்கப்பட்ட 3 மாதங்களிலேயே உயர்மட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலிருந்து முன்னறிவிப்பின்றி நேற்று முன்தினம் அதிகாலை விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில், நூற்றுக்கணக்கான கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அகரம்பள்ளிப்பட்டு-தொண்டமானூர் கிராமத்தை இணைக்கும் உயர்மட்ட பாலம் நேற்று முன்தினம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.15.90 கோடியில் 7 மீ. உயரம், 12 மீ. அகலம், 250 மீட்டர் நீளத்தில், 12 கண்களுடன்கட்டப்பட்ட இந்தப் பாலம் கடந்த செப். 2-ம் தேதி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: எங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட மகிழ்ச்சி 3 மாதங்கள்கூட நீடிக்கவில்லை.
தென்பெண்ணையில் கடந்த காலங்களில் திறந்து விடப்பட்ட அதிகபட்ச தண்ணீர் மற்றும் எதிர்காலத்தில் அதி கனமழை பெய்தால் அணையில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு ஆகியவற்றை கணக்கீடு செய்யாமல் கட்டியுள்ளனர். இதனால், ஒருமுறை வந்த வெள்ளத்துக்கே தாக்குபிடிக்க முடியாமல் பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது. தரமான முறையில் பாலம் கட்டப்பட்டதா என்று சந்தேகம் எழுகிறது. எனவே, வல்லுநர் குழு ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் செ.தேவராசு (நபார்டு மற்றும் கிராம சாலைகள்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நீரியியல் கணக்கீட்டின்படி பாலத்தின் நீர்வெளியேற்றம் 54,417 கனஅடியாகும். புயல் காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், பாலத்தின் மேற்பரப்பில் 4 மீட்டர் உயரத்தில் தண்ணீர் சென்றுள்ளது. தண்ணீரின் அதிக வேகம் காரணமாக பாலம் சேதமடைந்து, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அறிவிக்காமல்… நீர்வளத் துறை 1.68 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2 லட்சம் கனஅடிக்கு கூடுதலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டதே காரணம் என்று நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது மக்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்த பிறகும், சாத்தனூர் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்காமல் பராமரித்துள்ளனர். ஒரே நேரத்தில் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடிக்கும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் 4 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 2 லட்சம் கனஅடிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து மக்களுக்கு அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.