சேலம்: வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்தும் திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால், அதிக பாதிப்பு ஏற் பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
சேலம் கந்தம்பட்டி பகுதியில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேற்று பார்வையிட்ட பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏற்காடு மலை மற்றும் சேலத்தில் பெய்த தொடர் மழையால் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோரம் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் அதிமுக நிர்வாகிகள் மக்களுக்கு உதவி புரிந்து வருகின்றனர்.
திருமணிமுத்தாற்றில் முறையாக தூர்வாராததால்தான் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு, குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துள்ளது. உரிய முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இந்நிலை உருவாகியிருக்காது.
புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்தவுடன் உரிய முன்னெச்சரிக்கையை திமுக அரசு எடுத்திருந்தால், இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
அதேபோல, சாத்தனூர் அணையில் இருந்து நள்ளிரவில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கனஅடி நீரை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்து விட்டுள்ளனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்பெண்ணையாற்றின் கரை உடைந்ததால், விழுப்புரம் நகரில் தண்ணீர் புகுந்து பாதிப்பு அதிகரித்துள்ளது.
உரிய முன்னெச்சரிக்கை எடுக்காத, திறமையற்ற முதல்வர் மாநிலத்தை ஆள்கிறார். அரசின் அலட்சியத்தால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.