திருவண்ணாமலை: ஃபெஞ்சல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலையார் மலையில் கடந்த 1-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. அப்போது திருவண்ணாமலை வ.உ.சி. நகர் 11-வது வீதியில் மலையடிவாரத்தில் இருந்த 4 வீடுகள் மண்ணில் புதைந்தன.
இதில், ராஜ்குமார்(38), அவரது மனைவி மீனா(27), மகன் கவுதம்(9), மகள் இனியா(5), பக்கத்து வீட்டில் வசிக்கும் சரவணன் மகள் ரம்யா(7), மஞ்சுநாதன் மகள் விநோதினி(14), சுரேஷ் மகள் மகா(7) ஆகியோர் மண்ணில் சிக்கிக் கொண்ட னர். இவர்களில் 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று மூன்றாவது நாளாக மீட்புப் பணி தொடர்ந்தது. காலை 11 மணியளவில் ஒருவரது உடல் மீட்கப்பட்டது. மற்றொருவர் உடல் மீது ராட்சத பாறை இருந்ததால், மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது.
தொடர்ந்து, ஐஐடி வல்லுநர் குழு ஆலோசனைக்குப் பிறகு. பொக்லைன் இயந்திரம் உதவி யுடன் மாலையில் மற்றொருவரின் உடல் மீட்கப்பட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் 7 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட சென்னை ஐஐடி வல்லுநர்கள் மோகன், பூமிநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மலை உச்சியில் இருந்து வந்த தண்ணீரின் வேகத்தால் மண் அரிப்பு ஏற்பட்டு, பாறைகள் உருண்டுள்ளன. மண்ணின் தன்மையை ஆய்வு செய்து, அதன் அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்படும்” என்றனர்.
இதற்கிடையில், மண்சரிவு ஏற்பட்ட இடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறும்போது, “மலையடிவாரத் தில் இருந்து வெளியே வருவதற்கு மக்கள் விரும்பினால். மாற்று ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மண் சரிவு காரணமாக 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது குடும்பத்தினர். உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.