காரைக்கால்: இலங்கை கடற்படையினரால் காரைக்கால், நாகை மீனவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த பால்மணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், அரது சகோதரர் கலைமணி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த 16 பேரும், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இரு மீனவர்களும் கடந்த 1-ம் தேதி இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதுதவிர, பால்மணிக்குச் சொந்தமான மற்றொரு விசைப்படகில் மேலும் 16 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு தென் கிழக்கே ஒரு படகும், வடக்கு பகுதியில் ஒரு படகும் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, தென் கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த படகு பழுதாகி தத்தளித்து.
இதுகுறித்து மற்றொரு படகில் இருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு வந்து பழுதான படகை கயிறு கட்டி, இழுத்துச் செல்லத் தொடங்கினர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரு படகுகளையும் சுற்றி வளைக்க முற்பட்டனர். உடனே பழுதான படகை விட்டுவிட்டு, மற்றொரு படகில் சென்ற 16 மீனவர்களும் தப்பி கரை திரும்பினர்.
இந்நிலையில், பழுதான படகில் இருந்த 18 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகுடன் அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.