சாத்தனூர் அணை சர்ச்சை முதல் பொன்முடி மீதான சேறு வீச்சு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


சாத்தனூர் அணை நீர் திறப்பு விவகாரம்: இபிஎஸ் குற்றச்சாட்டு - “சாத்தனூர் அணையிலிருந்து எவ்வித முன்அறிவிப்புமின்றி சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இந்த அரசு அறிவித்துள்ள நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சில மணி நேரங்களில் 4 மாவட்டங்களில் பேரழிவு: ராமதாஸ் - “சாத்தனூர் அணை முன்னறிவிப்பின்றி திறந்து விடப்பட்டதற்கு காரணம் என்ன? இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் என்பதைக் கண்டறிய உயர்நிலை விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக ஆணையிட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீரை திறந்து விட்டு மக்களின் இன்னல்களை பல மடங்கு பெருக்கியிருக்கிறது. நள்ளிரவு 1.30 மணிக்கு சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், அடுத்த சில மணி நேரங்களில் 4 மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், தண்டராம்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மணலூர்பேட்டை பேரூராட்சி, திருக்கோயிலூர் நகராட்சி, விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சி, திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி, கடலூர் மாவட்டம் குச்சிப்பாளையம், மேல்குமாரமங்கலம் புலவனூர், கண்டரக்கோட்டை, கள்ளிப்பட்டு உள்ளிட்ட முதன்மைப் பகுதிகளையும், இவற்றைச் சுற்றியுள்ள பல நூறு கிராமங்களையும் சுற்றி வளைத்த வெள்ளம், அங்குள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கும், உயிரிழந்த கால்நடைகளுக்கும் உரிய இழப்பீடு வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சாத்தனூர் அணை விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்: “நள்ளிரவு நேரத்தில் கணிக்க முடியாத அளவுக்கு சாத்தனூர் அணையில் நீர் வந்து கொண்டிருந்தது. 5-வது முன்னெச்சரிக்கை அறிவிப்புக்கு பிறகும் நீர் வரத்து குறையாமல் மிக அதிக அளவில் இருந்தது. அந்த நேரத்தில் அணையில் இருந்து மிக அதிக அளவாக 1.8 லட்சம் கன அடி தண்ணீரை திறந்துவிடாமல் போயிருந்தால், அணைக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டு 7 டி.எம்.சி தண்ணீரும் வெளியேறியிருக்கும்.

அதனால் ஏற்படும் பாதிப்புகள் எல்லாம் கணக்கில் அடங்காது. ஆறாத துயரமாக அது மாறியிருக்கும். சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள்” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மக்களுக்கு நிவாரண நிதி! - ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கிடவும், முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும் அவர் உத்தரவிடப்பட்டுள்ளது.

பயிர்களுக்கான நிவாரணம் எவ்வளவு? - மழையினால் 33 சதவீதம் மற்றும் அதற்கு மேலாக பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் சேதமடைந்திருப்பின் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500 வழங்கிடவும், மழையினால் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500 வழங்கிடவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கால்நடை இழப்புகளுக்கான நிவாரண நிதி அறிவிப்பு: மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500 வழங்கிடவும்; வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000 வழங்கிடவும்; கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100 வழங்கிடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிடவும்; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ரூ.2,000 கோடி வழங்குக: நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல் - ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்ட ரூ. 2 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தின.

புதுச்சேரி கிராமங்களில் 2-வது நாளாக வெள்ளம்: தென்பெண்ணையாற்று வெள்ளப்பெருக்கு காரணமாக, புதுச்சேரியின் சோரியாங்குப்பம், ஆராய்ச்சிக்குப்பம், பாகூர், இருளன்சந்தை, கொம்மந்தான்மேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். அந்த பகுதிகளில் இருந்து சுமார் 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்கள் மற்றும் அரசு பள்ளிகள், தனியார் மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு: விழுப்புரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, உரிய நிவாரண உதவிகள் செய்யவில்லை எனக் கூறி, சுமார் 500-க்கும் மேற்பட்ட இருவேல்பட்டு கிராம மக்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அமைச்சர் பொன்முடி காரிலிருந்து இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அங்கிருந்த சிலர் சேற்றை வாரி வீசியதில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன்.கவுதமசிகாமணி, ஆட்சியர் பழனி உள்ளிட்டோரின் சட்டை மீது தெறித்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.பி.க்கள் விழுப்புரம் தீபக் ஸ்வாட்ச், திருவாரூர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அமைச்சர் பொன்முடியை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேறு வீச்சு சம்பவம்: அண்ணாமலை கருத்து - “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்துள்ள சம்பவம், தமிழக அரசு மீதான பொதுமக்களின் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளது. திமுகவுக்கு விரைவில் என்ன நடக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு மென்மையான நினைவூட்டல்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

நிவாரண நிதி பெறுவதில் தாமதம்: புதுச்சேரி அதிமுக - புதுச்சேரி கூட்டணி அரசில் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் மத்திய அரசிடமிருந்து போதிய நிவாரண நிதியை பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

x