கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 10 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 434 குடும்பங்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக தென்பெண்ணையாறு, வெள்ளாறு உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் கரையை ஒட்டிய திருக்கோவிலூர் நகரம், விழுப்புரம் பிரதான சாலை, அரண்டநல்லூர், துரிஞ்சல் ஆற்று கரையோரப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்ததால் அப்பகுதியில் வசிப்போர் பாதிப்புக்குள்ளாயினர்.
இது தவிர வாணாபுரம் மூங்கில்துறைப்பட்டு, சு.கள்ளிப்பாடி, மேலநந்தல், காங்கேயனூர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனிடையே, நேற்று இரவு மீண்டும் கனமழை பெய்ததால் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசித்தவர்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாயினர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் வாணாபுரம், மூங்கில் துறைப்பட்டு, சு.கள்ளிப்பாடி, காங்கேயனூர், மேலநந்தல் ஆகிய கிராமங்களில் 5 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 218 குடும்பங்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். இதில் 239 ஆண்கள், 364 பெண்கள், 204 குழந்தைகள் உள்ளனர்.
திருக்கோவிலூர் வட்டத்தில் கீழையூர், திருக்கோவிலூர், வடமருதூர் ஆகிய கிராமங்களில் 3 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 208 குடும்பங்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 315 ஆண்கள், 294 பெண்கள், 128 குழந்தைகள் என மொத்தம் 10 முகாம்கள் அமைக்கப்பட்டு 434 குடும்பங்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 562 ஆண்கள், 667 பெண்கள், 347 குழந்தைகள் உள்ளனர்.
சின்னசேலம் வட்டத்தில் காளசமுத்திரம் கிராமத்தில் ஒரு நிவாரண முகாம் அமைக்கப்பட்டு 3 குடும்பங்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஆண்கள், 4 பெண்கள், 2 குழந்தைகள் உள்ளனர். சங்கராபுரம் வட்டத்தில் புத்திரம்பட்டு கிராமத்தில் ஒரு நிவாரண முகாம் அமைக்கப்பட்டு 5 குடும்பங்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 5 ஆண்கள், 5 பெண்கள், 13 குழந்தைகள் உள்ளனர்.
நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு 3 வேலை உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மழைக் காலத்தில் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் மழைக் கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வனத்துறை அமைச்சரும், திருக்கோவிலூர் எம்எல்ஏ-வுமான பொன்முடி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை இன்று சந்தித்து ஆறுதல் கூறி, அரசின் நிவாரண உதவிகளையும் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் உடனிருந்தனர்.