ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்


புதுச்சேரி: ரேஷன் அட்டைகளுக்கு ரூ.10 ஆயிரம் மழை நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு புதுச்சேரியை பேரிடர் பகுதியாக அறிவித்து போதிய நிதியை வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'ஒரே நாளில் பெய்த அதி கன மழையினால் நகரப்பகுதி மட்டுமின்றி கிராமங்களிலும் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு வானிலை மையத்தின் அறிவுரைக்கேற்ப உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தினால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். அத்தியாவசிய பால் உள்ளிட்ட பொருட்களுக்கு உடனடியாக தட்டுப்பாடு ஏற்பட்டது.

வரலாறு காணாத வகையில் பல ஆண்டுகளுக்கு பின்னால் ஒரே நாளில் 50 செ.மீட்டர் அளவுக்கு பெய்த மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்திட மத்திய குழுவினை அனுப்பிட வேண்டும். மத்திய அரசு, புதுச்சேரியை தேசிய பேரிடர் பகுதியாக அறிவித்து போதிய நிதியை வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உணவு, ஒரே மையத்தில் தயார் செய்து கொடுப்பதனால் காலத்தோடு உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கடந்த காலங்களை போல் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு அருகிலேயே உணவு தயார் செய்து வழங்கிட வேண்டும்.

முதல்வர் அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.10,000 வழங்கிட வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000 வழங்கிட வேண்டும். முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.50,000 -ம், பகுதியாக சேதம் அடைந்த வீடுகளுக்கு ரூ.25,000-ம் வழங்கிட வேண்டும். சேதமடைந்த படகுகளை சீரமைத்திட ரூ.20,000 வழங்கிட வேண்டும். புயலினால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கிட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் பதுக்கல் செய்து பொருட்களில் செயற்கையான தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்படுத்துவதை தடுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x