எல்ஐசி முகவர்களுக்கான கமிஷன் தொகை குறைப்பை கைவிடவேண்டும்: மதுரையில் தர்ணா போராட்டம்


மதுரை: எல்ஐசி முகவர்களுக்கான கமிஷன் தொகையை குறைக்கக்கூடாது என மதுரையில் நடந்த கோட்ட எல்ஐசி முகவர்களின் தர்ணா போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை அண்ணாநகரில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லியாபி) சார்பில், எல்ஐசி முகவர்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் இன்று நடந்தது. மதுரை கோட்ட தலைவர் மரியலூயிஸ் தலைமை வகித்தார். செயலாளர் ராமசாமி வரவேற்றார். நெல்லை கோட்டம், தென்மண்டல அகில இந்திய காப்பீட்டுக் கழக செயற்குழு உறுப்பினர் சகாயராஜன் பெர்ணாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தென்மண்டலத் துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், கோட்ட தலைவர் சுரேஷ்குமார், கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கத் தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தனர்.

இப்போராட்டத்தில், 'இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைய அறிவுறுத்தலில் எல்ஐசி நிர்வாகம் எடுத்திருக்கும் முகவர்களுக்கான கமிஷன் தொகை குறைப்பை கைவிடவேண்டும். முகவர்களுக்கு ஏற்படும் இழப்பு, பாதிப்புகளை தடுக்கவேண்டும். பாலிசிதாரர்களுக்கு போனஸை உயர்த்தவேண்டும். பாலிசிதாரர்களுக்கான நுழைவு வயதை அதிகரிக்கவேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்து, பாலிசிக்கான ஜிஎஸ்டி-யை முற்றிலும் நீக்கவேண்டும்.

கிளாபேக் கமிஷன் என்ற சரத்தை நீக்கி, முகவர்களுக்கான குழு காப்பீடு வயதை உயர்த்தவேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்குதல், குறைந்தபட்ச காப்பீட்டை ஒரு லட்சமாக குறைக்கவும், முகவர்களுக்கான கமிஷனை குறைக்கக்கூடாது' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்தில் மதுரை கோட்டத்தைச் சேர்ந்த 25 கிளைகளிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்கள் பங்கேற்றனர். கோட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

கோட்ட தலைவர் மரியலூயிஸ் கூறுகையில், ''ஜிஎஸ்டி வரி செலுத்தும் வர்த்தகர்களுக்கான பாலிசிதாரர்களின் நுழைவு வயதை 65 ஆக உயர்த்தவேண்டும். காப்புத் தொகை ரூ.1 லட்சம் வழங்கவேண்டும். ரூ.2 லட்சமாக உயர்த்தினால் பாலிசிதாரர்களுக்கான பிரீமியமும் உயரும். இது கிராமப்புற மக்களை பாதிக்கும். எல்ஐசியின் புதிய திட்டத்தால் பாலிசிதாரர்கள், முகவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவேண்டும்'' என்றனர்.

x