சென்னை: மத்திய அரசு பணம் தரவில்லை, இதனால் எங்களுக்கு நிவாரண உதவி வழங்க முடியவில்லை என கூறி ஒதுக்க கூடாது. தற்பொழுது தமிழக அரசிடம் போதிய நிதி உள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடர் ஆய்வுக் குழுவினர் வந்து பார்வையிடுவார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கடலூர் மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘இந்தப் புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் 50 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக அளவில் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது.
இந்த கனமழையால் மரக்காணம் பகுதியில் உப்பளங்கள், இறால் பண்ணைகள் விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் சாத்தனூர் அணையில் இருந்து திடீரென 1.68 லட்சம் கன அடி நீர் திடீரென்று திறக்கப்பட்டது. இதன் காரணமாக 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
நாங்கள் புயல் தாக்குவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தோம் என தமிழக அரசு கூறுகிறது. ஆனால், இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே தரப்பட்டது. ஆனால் கிராமங்கள் தோறும் தண்டோரா மூலம் இந்த விழிப்புணர்வை செய்யவில்லை.
நீர் நிலைகள், வரத்து கால்வாய்கள் உள்ளிட்ட நீர் வழி இடங்களை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். இந்த ஆக்கிரமிப்பால் பல ஓலைகள் குட்டை குளங்கள் காணாமல் போய்விட்டது. மேலும் தமிழக அரசும் நீர்நிலை ஆதாரங்களை மழைக்காலத்திற்கு முன் முறையாக தூர் வரவில்லை. இதுவே வெள்ள பெருக்கிற்கு காரணம். மேலும், இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், விளைநிலங்கள், கால்நடைகளை முறையாக கணக்கீடு செய்து தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
மத்திய அரசு பணம் தரவில்லை, இதனால் எங்களுக்கு நிவாரண உதவி வழங்க முடியவில்லை என கூறி ஒதுக்க கூடாது. தற்பொழுது தமிழக அரசிடம் போதிய நிதி உள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடர் ஆய்வுக் குழுவினர் வந்து பார்வையிடுவார்கள். மேலும் இந்த பாதிப்புகள் குறித்து நான் டெல்லிக்கு செல்லும் பொழுது மத்திய அரசிடம் இதுகுறித்து விளக்கம் அளிப்பேன். நாங்கள் இங்கு வந்ததன் நோக்கம், நிலைமை எப்படி உள்ளது என்பதை மத்திய அரசுக்கு தெரிவிப்பதற்காகவே.
பொதுவாகவே, இதுபோன்ற தருணங்களில் ஒருவாரத்தில் மத்தியக் குழுவினர் வருவார்கள். இது ஒரு நடைமுறைதான். அவர்கள் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்வையிடுவார்கள். அதுவரை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக அரசு தொகை தரலாம். நிச்சயம் மத்திய அரசின் தரப்பில் இருந்து இழப்பீடு வழங்கப்படும். சாத்தனூர் அணை திறப்பின் போது, மாநில அரசு 5 முறை அலர்ட் கொடுத்து உள்ளோம் என்று கூறுகிறது. 1 மணிநேரம் முன்பு சொல்லி விட்டு 1.68 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விட்டுள்ளனர், இவ்வளவு குறுகிய நேரத்தில் மக்கள் எப்படி வெளியேற முடியும், இதனால் 38 கிராமங்கள் மூழ்கிவிட்டன. சாத்தனூர் அணையை சரியாக தூர் வாராததே வெள்ளபாதிப்புக்கு காரணம். அணையை திறப்பது குறித்து அதிகாலை 2 மணிக்கு அறிவிப்பு தந்ததால் மக்கள் வெளியேற முடியவில்லை’ என்றார்