மதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி சாலைப் பணிகள் முழுமையடையாமல் எந்தப் பணியும் நடைபெறாத நிலையே தொடர்வதால் 'ஸ்மார்ட் சிட்டி திட்டம்' மாநகராட்சியால் கைவிடப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வைகை ஆறு, மதுரை மாநகரை வடகரை, தென்கரை ஆகிய இரண்டு நகரப்பகுதிகளாக பிரிக்கிறது. இரு கரை நகரப் பகுதிகளுக்கும் சென்று வருவதற்கு 9 இடங்களில் பாலங்கள் உள்ளன. ஆனால், இந்த பாலங்களை வைகை ஆற்றின் நீள வாக்கில் ஒருங்கிணைக்கும் பிரதான நகரச் சாலை இல்லாததால், நகரப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வட மற்றும் தென்கரை மக்கள் தடையின்றி இரு நகரப் பகுதிகளுக்கும் வந்து செல்லும் வகையில் வைகை ஆற்றின் இரு கரைகளில் 'ஸ்மார்ட் சிட்டி' சாலை அமைக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் ரூ.81.41 கோடியும், நெடுஞ்சாலைத் துறை ரூ.300 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து இணைந்து வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ஸ்மார்ட் சிட்டி சாலை அமைக்கப்பட்டது.
இதில், நகருக்கு வெளியில் புறநகரில் நெடுஞ்சாலைத் துறை அமைத்த சாலை சிறப்பாகவும், தரமாகவும் முழுமையாக போடப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி சார்பில் போடப்பட்டுள்ள சாலை இன்னும் முழுமையடையாமல் உள்ளது. தென்கரையில் இந்த சாலை ஆரப்பாளையத்தில் தொடங்கி விரகனூர் ரிங் ரோட்டில் நிறைவடைய வேண்டும். ஆனால், இந்த சாலையில் மங்கரையர்கரசி பள்ளி அருகே சிறிது தூரம் தற்போது வரை போடப்படவில்லை.
அதுபோல், வடகரையில் ஆரப்பாளையத்தில் பாத்திமா கல்லூரி அருகே தொடங்கி, விரகனூர் ரிங் ரோடு பாலத்தில் நிறைவடைய வேண்டும். ஆனால், குருவிக்காரன் சாலை மேம்பாலத்தில் இருந்து தெப்பக்குளம்-அண்ணாநகர் பிடிஆர் பாலம் வரை 1 1/2 கி.மீ., வரை முடியவில்லை. தென்கரையில் ஒரு பகுதியும், வடகரையில் ஒரு பகுதியிலும் இந்த சாலை முழுமையடையாமல் துண்டித்து நிற்கிறது.
அதனால், இந்த சாலையை வாகன ஓட்டிகள் முழுமையாக பயன்படுத்த முடியில்லை. அதனால், எந்த நோக்கத்திற்காக இந்த சாலையை மாநகராட்சி தொடங்கியதோ, அது நிறைவடையாமல் இந்த சாலை அந்தரத்தில் நிற்கிறது. மேலும், இந்த சாலை போட்டப்பகுதிகளில் வாகன ஓட்டிகள், மக்கள் பயன்படுத்த முடியாமல் தனியார் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுகின்றன.
சாலையோர கடைகள், தங்கள் பொருட்களை இந்த சாலையிலே போட்டு வியாபாரம் செய்தனர். மாட்டுத் தொழுவங்கள் சாலையில் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஒரு முறை நகரமைப்பு அதிகாரி, போலீஸ் பாதுகாப்புடன் சென்றபோது அங்குள்ளவர்கள் அவர்களை விரட்டியத்தனர். அதன்பிறகு தற்போது வரை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலைபோடாத இடங்களில் சாலைகளை அமைக்கவும் மாநகராட்சி முயற்சி செய்யவில்லை.
மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''ஸ்மார்ட் சிட்டி நிதியைக் கொண்டு, அந்த சாலை போட்டு முடிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிகளில் புதிய சாலை அமைக்க, சிறப்பு நிதி கேட்கப்பட்டுள்ளது. அந்த நிதி வந்ததும் விடுபட்ட பகுதிகளில் சாலை அமைக்கப்படும்,'' என்றார்.