வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் கடந்த 3 நாட்களாக சராசரி அளவாக 118.93 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அகரம் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் வேலூர் பாலாற்றில் 2,075 கன அடிக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளன. வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி வழியாக விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களை கடந்த நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்துக்குள் நுழைந்தது.
ஃபெஞ்சல் புயலால் வேலூர் மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி தொடங்கி நேற்று அதிகாலை வரை பரவலான மழை பெய்தது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி பிற்பகலுக்கு பிறகு மழைப் பதிவு தொடங்கி நேற்று காலை வரை தொடர்ந்தது. கடந்த 3 நாட்களில் பெய்த மழையில் சராசரி அளவாக ஒடுக்கத்தூரில் 166, குடியாத்தம் 62, மேல் ஆலத்தூர் 100.4, மோர்தானா அணை பகுதி 76, ராஜாதோப்பு அணை பகுதி 114, விரிஞ்சிபுரம் 128.9, காட்பாடி 98.6, பொன்னை 135.6, அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 126.6, பேரணாம்பட்டு 96.4, சத்துவாச் சாரி 149.2, வேலப்பாடி 173.5 என மொத்தம் 1427.20 மி.மீ மழையும் ஒட்டுமொத்த சராசரி யாக 118.93 மி.மீ மழையும் பதிவாகியுள்ளன
அணைகள் நிலவரம்: வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமான மோர் தானா அணை 37.72 அடி உயரத் துடன் 261.36 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் தற்போது 7.38 அடி உயரத்துடன் 56.53 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அதேபோல், ராஜாதோப்பு அணை 24.57 அடி உயரத்துடன் 20.52 மில்லியன் கன அடி நீரை தேக்கிவைக்க முடியும். அணை யில் தற்போது 7.35 அடி உயரத் துடன் 1.24 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது. 2 அணைகளுக்கும் நீர்வரத்து இல்லை.
ஏரிகள் நிலவரம்: வேலூர் மாவட்டத்தில் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் 101 ஏரிகள் உள்ளன. இதில், 10 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 76% அதிகமாக 2 ஏரிகளும், 51% அதிகமாக 4 ஏரிகளும், 26% அதிகமாக 27 ஏரி களும், 25% குறைவாக 28 ஏரி களும் 30 ஏரிகள் வறண்டும் காணப்படுகிறது. மொத்தமுள்ள 101 ஏரிகளின் நீர் இருப்பு கொள் ளளவு 2,311.32 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரிகளில் தற்போது 707.67 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: ஃபெஞ்சல் புயலால் திருப்பத் தூர் மாவட்டத்தில் ஓரளவுக்கு பரவலான கனமழை பதிவான நிலையில் தமிழக -ஆந்திர எல்லையில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசால் கட்டப்பட்ட புல்லூர் தடுப்பணையை கடந்து நேற்று காலை குறைந் தளவு தண்ணீர் மட்டுமே வெளியேறியது. அதேநேரம், பாலாற்றின் துணை ஆறுகளில் ஃபெஞ்சல் புயலால் நீர்வரத்தால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வாணியம்பாடி அருகே மண்ணாற்றில் இருந்து நேற்று 50 கன அடி அளவுக்கும், அகரம் ஆற்றில் இருந்து பாலாற் றுக்கு 1,600 கன அடிக்கும், பள்ளிகொண்டா பேயாற்றில் இருந்து 150 கன அடியும், வெள்ளக்கல் கானாறு, ஆணை மடுகு கானாறு உள்ளிட்ட பல்வேறு கானாறுகள் மூலம் பாலாற்றுக்கு 75 கன அடி அளவுக்கு நீர்வரத்து இருந்தது. பல்வேறு வழிகளில் பாலாற்றுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வேலூர் பாலாற்றில் நேற்று 2,075 கன அடிக்கு வெள்ளப்பெருக்கு இருந்தது. வேலூர் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை ஏராளமான பொதுமக்கள் ரசித்து செல்கின்றனர்.