அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அரூர் பகுதியில் 300 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் உள்ள காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு கிராமங்கள் காட்டாற்றினால் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியேற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரூர் நகரை ஒட்டி செல்லும் வாணியாற்றில் 25 ஆண்டுகளுக்கு பின்பு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அரூர் நகரில் உள்ள ஆற்றோர வீதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. பேரூராட்சி தலைவர் இந்திராணி தலைமையில துணைத் தலைவர் தனபால், நியமனக்குழ உறுப்பினர் முல்லை ரவி மற்றும் பேரூராட்சி, வருவாய் துறை அலுவலர்கள் அங்குள்ளவர்களை பத்திரமாக மீட்டு தற்காலிகமாக அமைக் கப்பட்டுள்ள முகாம்கள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
காளிப்பேட்டை அருகே நேற்று காலை சென்ற பால் டேங்கர் லாரி மண் அரிப்பு, சகதியில் சிக்கி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த மழை காரணமாக அரூர் கோட்டத்திற்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி,கடத்தூர், தென் கரைக்கோட்டை, ராமியம்பட்டி, புதுப்பட்டி, பாப்பம்பாடி, கொக்கரப்பட்டி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 1,000 ஏக்கர் மரவள்ளிக் கிழங்கு வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மரவள்ளிக்கிழங்கு அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் மஞ்சள் மற்றும் நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சித்தேரி மலைக்கு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்துள்ளன. இதனால் சித்தேரிமலையில் உள்ள 35-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அரூரில் தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, உடை வழங்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளை அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார் பார்வையிட்டு உதவிகளை வழங்கினார்.