தருமபுரி: தருமபுரியில் பிடமனேரி ஏரி நிறைந்து வெளியேறிய உபரி நீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். ஃபெஞ்சல் புயலால் நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் மழையால் தருமபுரியில் இலக்கியம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள பிடமனேரி ஏரி நிரம்பியது.
இதனால் அன்று இரவு முதல் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் பிடமனேரி, நந்தி நகர், ஏஎஸ்டிசி நகர், ஆவின் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து 300-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்தது. மேலும், தாழ்வாக அமைந்திருந்த சில வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பிடமனேரி ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் அடுத்த ஏரியை நோக்கி செல்வதற்கான கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை. சில இடங்களில் ஆக்கிரமிப்பிலும் சிக்கியுள்ளன. இதனால் தண்ணீர் வெளியேற முடியாமல் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்து கொண்டது. இதனால் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் தவிக்கிறோம். நிறைய வீடுகளுக்குள்ளும் தண்ணீர் நுழைந்துள்ளது. மின் இணைப்பை துண்டித்துவிட்டு இருளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீடுகளின் போர்டிகோ பகுதியிலும், வீட்டுக்கு வெளியிலும், காலி மனைகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள், ஆட்டோக்கள், வேன்கள் ஆகிய வாகனங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சிரமங்களுக்கு உள்ளாகாத வகையில் பிடமனேரி ஏரியின் நீர் வெளியேறும் கால்வாய்களை தூர்வார வேண்டும், என்றனர்.
இதுபோல, தருமபுரியை அடுத்த பாரதிபுரம் பகுதியில் அன்னசாகரத்துக்கு செல்லும் சாலையில் தரைப்பாலம் வெள்ளத்தால் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி இலக்கியம்பட்டி அடுத்த அழகாபுரி பகுதியிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இவைதவிர, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது.