தருமபுரி: தருமபுரி மாவட்டம் நூலஅள்ளி, கொமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் படுக்கையாக சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தருமபுரி ஒன்றியம் மிட்டாநூலஅள்ளி, தின்னஅள்ளி, நல்லசேனஅள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பருத்தி, நெல், சம்பங்கி பூ உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் நிலத்தடி நீர் ஓரளவு உயர்ந்துள்ள நிலையில் இப்பகுதி விவசாயிகளில் பலரும் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
குறிப்பாக இவர்கள் சம்பா வகை நெற்பயிர்களை நடவு செய்துள்ளனர். இவ்வாறு நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடை நிலையை எட்டியுள்ளன. இந்நிலையில், புயலால் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் பல விவசாயிகளின் வயல்களில் இருந்த நெற்பயிர்கள் வயலில் தரைமட்டமாக படுத்து விட்டன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, இப்பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது: வீட்டுத் தேவைக்காக ஒவ்வொரு விவசாயியும் தங்கள் நிலத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் நெல் நடவு செய்துள்ளோம். இளம் பட்டமாக நடவு செய்யப்பட்ட சில வயல்களில் மட்டும் தான் நெற்பயிர்கள் கரும்பச்சை நிறம் மாறாமலும், கதிர் விடாமலும் உள்ளன. பெரும்பாலானவர்களின் நிலங்களில் கதிர் முற்றி அறுவடையை நெருங்கும் நிலையில் உள்ளது.
இந்த சூழலில் தொடர்ந்து பெய்த புயல் மழையால் கதிர்களில் மழைநீர் ஏறி பாரம் ஏற்பட்டதால் பயிர்கள் வயலில் முழுமையாக சாய்ந்து விட்டன. கதிர்கள் தொடர்ந்து தண்ணீரை தொட்டுக் கொண்டே உள்ளன. இவ்வாறு கதிர்களில் ஈரம் குறையாமல் இருந்தால் ஓரிரு நாட்களில் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கி விடும்.
மழைப்பொழிவு நின்று, வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிந்தால் தான் நெல் அறுவடை மேற்கொள்ள முடியும். அதற்கு முன்பாக பாதி நெல்மணிகள் முளைத்து விடும். இதனால், எங்கள் உழைப்பின் பெரும்பகுதி வீணாகிறது, என்றனர்.