விழுப்புரம்: விக்கிரவாண்டி - முண்டியம் பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட சாத்தனூர் ரயில்வே பாலத்தின் கீழ்பகுதியில் வெள்ளநீர் அபாய கட்டத்தில் செல்வதால் பல்வேறு ரயில்களின் சேவையை ரயில்வேத்துறை நிறுத்தியது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் விழுப்புரத்துடன் நிறுத்தப்பட்டது.
திருச்சியிலிருந்து முற்பகல் 11 மணிக்கு புறப்பட வேண்டிய சோழன் விரைவு ரயில், நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரை செல்லும் வந்தேபாரத் ரயில், மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் மதுரை - சென்னை தேஜஸ் விரைவு ரயில், சென்னையில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான வைகை அதிவிரைவு ரயில், சென்னையிலிருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு காரைக்குடி வரை செல்லும் பல்லவன் அதிவேக விரைவு ரயில், சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு திருநெல்வேலிக்கு பறப்பட்டுச் செல்லும் வந்தேபாரத் ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்தது.
இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற நெல்லை விரைவு ரயில், ராமேசுவரத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரை சென்ற சேது விரைவு ரயில், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை சென்ற அந்தியோதயா விரைவு ரயில், ராமேசுவரத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற விரைவு ரயில், தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில், திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூர் வரை சென்ற செந்தூர் விரைவு ரயில் ஆகிய 6 ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
காலை 7 மணிக்குள் இந்த ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 12.30 மணிக்கு மேல் சாத்தனூர் பகுதியில் தண்டவாளத்தின் கீழ் செல்லும் வெள்ளநீரின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கியதால், ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து ஒவ்வொரு ரயிலும் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டது.
இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து எழும்பூர் வரை செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலை விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, வேலூர் வழியாக இயக்க முடிவு செய்த நிலையில், விழுப்புரம் வெங்கடேசபுரம் ரயில் நிலையம் அருகே சென்றபோது ரயிலைத் தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து வெங்கடேசபுரம் ரயில் நிலையம் அருகிலேயே அனந்தபுரி விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலில் பயணித்த பயணிகளை பேருந்துகள் மூலம் ரயில்வே நிர்வாகம் விழுப்புரம் அழைத்து வந்து, பின்னர் சென்னைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியது. இதனால் ரயில்கள் மூலம் சென்னைக்கு செல்வதற்காக இருந்தோர் பெரும் அவதிக்குள்ளாகினர். அந்த ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் விழுப்புரத்தில் இறக்கி விடப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி பேருந்து நிலையத்துக்கு பேருந்துகளிலும், ஷேர் ஆட்டோக்களிலும், நடந்தும் சென்றனர். பல்வேறு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டதால் பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக வந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.