சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சாலைப் போக்குவரத்து பாதிப்பு


விழுப்புரம் மாவட்டம் அரசூரில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையை கடந்து செல்லும் தென்பெண்ணையாற்று வெள்ள நீர்.

கள்ளக்குறிச்சி: ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நேற்று நள்ளிரவு திறக்கப்பட்டது. இதனால் தென் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குடியிருப்புகள், விளைநிலங்கள், முக்கிய சாலைகள் பாதித்துள்ளது.

குறிப்பாக சென்னை - திருச்சி சாலை மார்க்கத்தில் விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியான அரசூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வெள்ளநீர் பாய்ந்தோடுவதால், சென்னை - திருச்சி இடையேயான சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணையாற்று வெள்ளநீர் தளவானூர், திருப்பாச்சனூர் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியதால் விக்கிராண்டி - தஞ்சை சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங் கள் திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு தொடர்பாக தென்பெண்ணையாற்று வடிகோல கோட்ட செயல் பொறியாளரிடம் கேட்டபோது, “நேற்று நள்ளிரவு தான் (நேற்று முன்தினம் இரவு) அணை திறக்கப்படுவதாகவும், 1.70 லட்சம் கன அடி திறந்து விடப்பட்ட தகவலும் கிடைத்தது.

இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து கிராமங்களிலும், சாலைகளிலும் தண்ணீர் ஓடியது. தற்போது தண்ணீரின் அளவு 66 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே தண்ணீர் வடிந்து நாளை முதல் (இன்று) போக்குவரத்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

x