சென்னை: வட தமிழகத்தின் உள்பகுதியில் நிலவிய ‘ஃபெஞ்சல்’ புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்துள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ. அளவுக்கு அதிகனமழை கொட்டியது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடதமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், அன்று பிற்பகல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்தது. தொடர்ந்து, மாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இந்நிலையில், நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுகுறைந்து, வடதமிழக உள்பகுதிகளில் நிலவுகிறது. இது, இன்று காலை தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் கெடாரில் 42 செ.மீ, சூரப்பட்டில் 38 செ.மீ, தருமபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம், கோலியனூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தல் ஆகிய இடங்களில் தலா 32 செ.மீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் மடம்பூண்டியில் 31 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் முகையூர், வளவனூர் ஆகிய இடங்களில் தலா 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், நாளை ஒருசில இடங்களிலும், 5 முதல் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம், இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.