கிருஷ்ணகிரி: ‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மறுநாள் காலை வரை இடைவிடாமல் மழை கொட்டியது. இதில், ஊத்தங்கரையில் 50 செ.மீ, போச்சம்பள்ளியில் 25 செ.மீ பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதனிடையே, இரவு மழையின்போது, ஊருக்குள் உள்ள வெங்கடதான்பட்டி ஏரி மற்றும் சின்னப்பன் ஏரி ஆகிய ஏரிகள் நிரப்பி உபரிநீர் வெளியேறி செல்ல வழியின்றி ஏரியைச் சுற்றியுள்ள அண்ணாநகர். ஜீவாநகர் உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளில் புகுந்து வெள்ளக்காடானது. இதையடுத்து, குடியிருப்பு பகுதியில் இருந்த 800 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இதேபோல, சிங்காரப்பேட்டை குடியிருப்பு பகுதியில் இருந்து 104 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
நேற்று அதிகாலை ஊத்தங்கரை பேருந்து நிலையம் எதிரில் உள்ள பரசனேரி நிரம்பி உபரிநீர் வெளியேறிக் கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாடகை சுற்றுலா வேன்கள். கார்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீரில் இழுத்து செல்லப்பட்டு. அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் விழுந்தன. இதனால், பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதேபோல, போச்சம்பள்ளி அருகே கோணணூர் ஏரி நிரம்பி வெளியேறிய உபரி நீர் ஊருக்குள் புகுந்ததால், நகரப் பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. இதில், நகரின் பிரதான சாலையான தருமபுரி-திருப்பத்தூர் சாலை வெள்ளத்தால் சூழ்ந்தது. இதில், போச்சம்பள்ளி காவல் நிலையம், வர்த்தக நிறுவனங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், இச்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஊத்தங்கரையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ஆட்சியர் கே.எம்.சரயு, எஸ்பி தங்கதுரை ஆகியோர் பார்வையிட்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இதுதொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறும்போது, ‘பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு வீரர்கள் மற்றும் மின்வாரிய துறை யினர், காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முகாமில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன’ என்றார். இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் முத்துசாமி நேற்று ஊத்தங்கரை வந்து மீட்பு பணியை தீவிரப்படுத்தினார்.
நிவாரணம் வழங்கிய உதயநிதி: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை பாதிப்புகளை நேற்று பார்வையிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
பழனிசாமி கோரிக்கை: ஊத்தங்கரையில் மழை பாதிப்பு பகுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று ஆய்வு செய்து, நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது. “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.