சென்னை: திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கிய 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த கொடூர நிகழ்வில் அனைவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
நேற்று ஃபெஞ்சல் புயலால் கனமழையின் தாக்கம் தீவிரமாக இருந்ததால், மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள திருவண்ணாமலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் கற்கள், ராட்சர பாறைகள் உருண்டு வந்ததால், வீடுகள் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் அடித்து செல்லப்பட்டு, மண்ணில் புதைந்தன. மேலும், திருவண்ணாமலை வ.உ.சி., 11-வது தெருவில் மலையடிவாரத்தில் உள்ள 4 வீடுகள் மண் சரிவில் சிக்கிக் கொண்டது.
இந்த மண் சரிவின்போது வீடுகளில் இருந்த ராஜ்குமார், மீனா, கவுதம் (8), வினியா (6), மகா(12), தேவிகா (16), வினோதினி(16) ஆகியோர் மண் சரிவில் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற திருவண்ணாமலை தீயணைப்புத் துறையினர் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். மண் சரிவு காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்ததால், மீட்பு பணி பாதிக்கப்பட்டன. இதற்கிடையில், மண் சரிவில் மண்ணில் புதைந்தவர்களை மீட்க, தேசிய பேரிடர் குழுவினர் 35 பேர் வரவழைக்கப்பட்டு, 2-வது நாளாக இன்று காலை மீட்பு பணி தொடங்கியது. இவர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட காவல் கமாண்டோ குழுவினர் 50 பேரும், மாநில மீட்பு படையினர் 20 பேரும், திருவண்ணாமலை ஆயுதப்படை காவலர்கள் 40 பேர் உட்பட மொத்தம் 170 பேர் ஈடுபட்டுள்ளனர்.
மீட்பு பணியில் இயந்திரங்களை ஈடுபடுத்தினால், மண் தளர்வு ஏற்பட்டு, மேலும் பாறைகள் உருண்டு வரும் ஆபத்து உள்ளன. இதனால், கடப்பாரைகள் மூலம் மீட்பு பணி நடைபெறுகிறது. இன்று மாலை வரை, மண்ணில் புதைந்ததாக கூறப்படுபவர்களின் நிலை குறித்து தெரியவில்லை. மீட்பு பணியில் இடையூறு ஏற்படும் வகையில், அடிக்கடி மழையும் பெய்து வருகிறது.
இந்த சூழலில் 7 பேரை மீட்கும் பணியில் முதலில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது. அதனையடுத்து நிலச்சரிவில் சிக்கிய 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது, மேலும் ஒருவரின் உடலை தேடும் பணிகள் நடந்து வருகிறது. அதில் கவுதம் என்ற சிறுவன், ராஜ்குமார் என்ற இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மீதமுள்ள இரு சிறுமிகள் அடையாளம் தெரியாத அளவுக்கு அவர்களின் சடலங்கள் மீது சேறும் சகதியும் இருப்பதால் அடையாளம் காண மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கிய 7 பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.