சென்னை: வெள்ள பாதிப்பு மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில தினங்களாக மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் புயல் புதுச்சேரி மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டிவனம் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது.
ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக உள் பகுதிகளில் நிலவுவதன் காரணமாக, நாளை கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.