நாளையும் தமிழகத்தில் கனமழை நீடிக்கும்: வானிலை மையம் முக்கிய அறிவிப்பு


சென்னை: ஃபெஞ்சல் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக உள் பகுதிகளில் நிலவுவதன் காரணமாக, நாளை கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஃபெஞ்சல் புயல், நேற்று மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது, செவ்வாய்க்கிழமை காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.

இதன் காரணமாக, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் சமவெளிப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை(டிசம்பர் 3ம் தேதி) கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிச.4ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.5 முதல் டிச.8ம் தேதி வரையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x