மதுரை: நீண்ட காலமாக செலுத்தாததால் மாநகராட்சி கடைகள் வாடகை பாக்கி ரூ.72 கோடியாக உயர்ந்ததால் வசூல் செய்வதற்கு, சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. வாடகை செலுத்தாதவர்கள் கடைகளுக்கு 'பூட்டு' போட்டு இந்த குழு அதிரடி நடவடிக்கை எடுத்து வருவதால் மாநகராட்சி வரலாற்றில் கடந்த 20 நாட்களில் கடைகள் வாடகை மட்டும் ரூ.2.75 கோடி வசூலாகியுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு நிரந்தரமாக வருவாய் தரக்கூடிய வகையில் வரி வருவாய், வரியில்லாத வருவாய் இனங்கள் உள்ளன. இதில், பொதுமக்கள் செலுத்தக்கூடிய வரி வருவாய் ஓரளவு வசூலாகிவிடுகிறது. ஆனால், மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட், எம்ஜிஆர் பேருந்துநிலையம் கடைகள், ஆம்னி பேருந்துநிலையம் கடைகள், ஆரப்பாளையம் கடைகள் போன்ற வரியில்லாத வருவாய் மூலம் ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய ரூ.19 கோடியை வசூல் செய்வது, மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.
மாநகராட்சி கடைகளை, பெரும்பாலும், ஆளும்கட்சி, எதிர்கட்சிகளை நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சிகள் பின்னணியில் செயல்படும் வியாபாரிகளே, எடுத்து நடத்துகிறார்கள். இவர்களில் வியாபாரிகள் அல்லாதவர்கள், கடைகளை தற்போது மார்க்கெட் நிலவரப்படி கூடுதல் வாடகைக்கு விட்டுள்ளார்கள். உள் வாடகைக்கு விட்டவர்களிடம் முறையாக வாடகையை வசூல் செய்யும் அவர்கள், மாநகராட்சிக்கு மட்டும் முறையாக வாடகையை செலுத்துவதில்லை.
மாநகராட்சி அவ்வப்போது நோட்டீஸ் மற்றும் 'சீல்' நடவடிக்கை எடுத்த பிறகு ஓடோடி சென்று வாடகை செலுத்துகிறார்கள். அப்படியிருந்தும் ஏராளமான வியாபாரிகள், வாடகையை செலுத்தாமல் இழுத்தடிக்கிறார்கள். இந்த வகையில் கடைகளை வாடகை செலுத்தாத வகையிலே மாநகராட்சிக்கு ரூ.72 கோடி கடைகள் வாடகை பாக்கி உள்ளது. கடந்த காலத்தில் மார்க்கெட், பேருந்துநிலையம் கடைகள் வாடகையை வசூல் செய்வதற்கே, 'சந்தை கண்காணிப்பாளர்' என்ற பணியிடம் இருந்தது. தற்போது இந்த பணியிடம் இல்லாததால் சமீப காலமாக மாநகராட்சி கடைகள் வாடகை முறையாக வசூலாகாமல் வாடகை பாக்கி நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.
சமீபத்தில் இந்த கடைகள் வாடகை பாக்கியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், உடனடியாக இந்த வாடகையை வசூல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார். அதற்காக, பேருந்துநிலையங்கள், மார்க்கெட்டுகளில் உள்ள கடைகள் வாடகையை வசூல் செய்வதற்கு சிறப்புக் குழுவை நியமித்தார். இந்த குழுவில், மாநகராட்சி வருவாய் உதவி ஆணையர் மாரியப்பன் தலைமையில் வருவாய் அலுவலர் ராஜாராம், கண்காணிப்பாளர் கண்ணன், நிர்வாக அலுவலர் ரெங்கராஜன், சந்தை கண்காணிப்பாளர்களாக செந்தில்குமார், ராமச்சந்திரன் ஆகியோரும், 20 பில்கலெக்டர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள், தினமும் நீண்ட காலம் வாடகை பாக்கி உள்ள பேருந்துநிலையம், மார்க்கெட்டுகளுக்கு சென்று வாடகையைக் கேட்பது, அவர்கள் வாடகை செலுத்தாவிட்டால் கடைகளுக்கு 'சீல்' வைத்து நடவடிக்கை எடுக்கின்றனர். இந்த சிறப்பு குழுவின் அதிரடி நடவடிக்கையால், கடந்த 20 நாட்களில் இதுவரை வசூலாகாமல் இருந்த ரூ.2.75 கோடி வசூலாகியுள்ளது. குறிப்பாக கடந்த 4 நாட்களில் 40 லட்சம் வசூலாகியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஒவ்வொரு 9 ஆண்டிற்கு ஒரு முறையும், சந்தை நிலவரப்படி, மாநகராட்சி கடைகள் வாடகையை அதிகரிக்க வேண்டும். அதை எதிர்த்தும், வாடகை செலுத்தாத கடைகளை பூட்டும் நடவடிக்கையை எதிர்த்தும் சிலர் உயர் நீதிமன்றத்திற்கு சென்றனர். நீதிமன்றம் மாநகராட்சிக்கு சாதகமாக வாடகைப் பாக்கி செலுத்த உத்தரவிட்டுள்ளது. அதனால், 2017ம் ஆண்டிற்கு பிறகு வாடகை செலுத்தாதவர்கள், தற்போது செலுத்தி வருகிறார்கள். விரைவில் நிலுவை பாக்கி ரூ.72 கோடியையும் வசூல் செய்துவிடுவோம்'' என்றனர்.