புதுச்சேரி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலளராக ராமச்சந்திரன் தேர்வாகியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில 24வது மாநாடு தொண்டர்கள் அணிவகுப்புடன் சனிக்கிழமை வில்லியனூரில் துவங்கி ஞாயிற்றுக் கிழமை மாலை வரை நடைபெற்றது. தோழர் சீதாராம் யெச்சூரி நினைவரங்கத்தில் துவங்கிய மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசினார். தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகால வேலை அறிக்கை மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் வாசித்தார். அதனைத் தொடர்ந்து வரவு செலவு அறிக்கை மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தாக்கல் செய்தார். தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் பிரதிநிதிகள் விவாதத்திற்கு பிறகு புதிய மாநில செயலாளராக ராமச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டார். மேலும், புதிதாக 30 நபர்கள் கொண்ட புதிய மாநில குழுவும், மாநில செயற்குழு உறுப்பினர்களாக ராமச்சந்திரன், ராஜாங்கம், சுதா சுந்தர்ராமன், பெருமாள் , தமிழ்ச்செல்வன், சீனுவாசன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ் , கலியமூர்த்தி, சத்தியா ஆகிய பத்து பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இந்த ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு இடதுசாரி தலைமையிலான கூட்டணி அரசை ஏற்படுத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். மின்துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். சமூக பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி, வாலிபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.