திருவண்ணாமலையில் தொடரும் சோகம்: 3 வது முறையாக பயங்கர நிலச்சரிவு


சென்னை: திருவண்ணாமலை ஏற்கெனவே இரண்டு முறை மண் சரிவு ஏற்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

நேற்று ஃபெஞ்சல் புயலால் கனமழையின் தாக்கம் தீவிரமாக இருந்ததால், மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள திருவண்ணாமலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் கற்கள், ராட்சர பாறைகள் உருண்டு வந்ததால், வீடுகள் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள் அடித்து செல்லப்பட்டு, மண்ணில் புதைந்தன. மேலும், திருவண்ணாமலை வ.உ.சி., 11-வது தெருவில் மலையடிவாரத்தில் உள்ள 4 வீடுகள் மண் சரிவில் சிக்கிக் கொண்டது.

இந்த மண் சரிவின்போது வீடுகளில் இருந்த ராஜ்குமார், மீனா, கவுதம் (8), வினியா (6), மகா(12), தேவிகா (16), வினோதினி(16) ஆகியோர் மண் சரிவில் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற திருவண்ணாமலை தீயணைப்புத் துறையினர் மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். மண் சரிவு காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்ததால், மீட்பு பணி பாதிக்கப்பட்டன. இதற்கிடையில், மண் சரிவில் மண்ணில் புதைந்தவர்களை மீட்க, தேசிய பேரிடர் குழுவினர் 35 பேர் வரவழைக்கப்பட்டு, 2-வது நாளாக இன்று காலை மீட்பு பணி தொடங்கியது. இவர்களுடன் திருவண்ணாமலை மாவட்ட காவல் கமாண்டோ குழுவினர் 50 பேரும், மாநில மீட்பு படையினர் 20 பேரும், திருவண்ணாமலை ஆயுதப்படை காவலர்கள் 40 பேர் உட்பட மொத்தம் 170 பேர் ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணியில் இயந்திரங்களை ஈடுபடுத்தினால், மண் தளர்வு ஏற்பட்டு, மேலும் பாறைகள் உருண்டு வரும் ஆபத்து உள்ளன. இதனால், கடப்பாரைகள் மூலம் மீட்பு பணி நடைபெறுகிறது. இன்று மாலை வரை, மண்ணில் புதைந்ததாக கூறப்படுபவர்களின் நிலை குறித்து தெரியவில்லை. மீட்பு பணியில் இடையூறு ஏற்படும் வகையில், அடிக்கடி மழையும் பெய்து வருகிறது.

இதனிடையே மகா தீப மலையில் இன்றும் 2 இடங்களில் இன்று மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் ஏற்கனவே வ.உ.சி.நகர் மலைப்பகுதியில் இரண்டு இடங்களில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், தற்போது திருவண்ணாமலை தென்கிழக்கு பகுதியில் சுமார் 2 ஆயிரம் அடி அளவிற்கு மலை உச்சியில் இருந்து மண்சரிவு ஏற்பட்டது. திருவண்ணாமலை பகுதியில் மூன்றாவது இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலையின் அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியை ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோருடன் சென்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று பார்வையிட்டார்.

x