ஓசூர்/ கிருஷ்ணகிரி/ தருமபுரி: ஃபெஞ்சல் புயல் மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடாது பெய்த மழையால் நேற்று (1-ம் தேதி) மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதில், பாம்பாறு பகுதியில் 95 மிமீ மழை பதிவானது. ஃபெஞ்சல் புயல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை நேற்று இரவு வரை தொடர்ந்து இடி, மின்னலுடன் விட்டு விட்டு கனமழை பெய்தது.
இதனால், தாழ்வான குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். பகல் முழுவதும் தொடர்ந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வேலைக்குச் செல்வோர் மற்றும் பல்வேறு தேவைகளுக்காகச் சென்றவர்கள் குடை பிடித்தபடி சென்றனர். இருப்பினும், விடுமுறை நாளான நேற்று சாலைகளில் வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. தொடர் மழையால் குளிர் காற்றும் வீசியதால், பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர்.
நேற்று காலை 7 மணி நில வரப்படி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பெய்த மழையாளவு (மில்லி மீட்டரில்) விவரம்:பாம்பாறு 95, ஊத்தங்கரை 71, பெனுகொண்டபுரம் 46.40, போச்சம்பள்ளி 36, பாரூர் 37, நெடுங்கல் 28.40 மிமீ மழை பதிவானது. இதனிடையே, தொடர் மழைக்கு ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி காமராஜர் நகரில் இரு வீடுகளில் சுவர்கள் இடிந்து விழுந்ததில், 7 வயது சிறுவன் லேசான காயமடைந்தார்.
வாரச்சந்தையில் வர்த்தகம் பாதிப்பு போச்சம்பள்ளியில் ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தை கூடும். இச்சந்தை தமிழகத்தில் இரண்டாவது பெரிய சந்தையாகும். இங்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் கால்நடைகளும் விற்பனையாகும். இங்கு ஆடு, கோழி, மாடுகளை வாங்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களிலிருந்தும், கேரள, கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலிருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருகை தருவார்கள்.
இதனால், இச்சந்தையில் வாரம்தோறும் ரூ.60 முதல் ரூ.80 லட்சம் வரையில் கால்நடைகள் வர்த்தகம் நடைபெறும். விழாக்
காலங்களில் சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில், நேற்று கூடிய சந்தையில் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை குறைந்தது. கால்நடைகளை வாங்கிச் செல்ல வெளியூர் வியா பாரிகள் வரத்து குறைந்ததால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட மழையளவு: இதுபோல,தருமபுரி மாவட்டத்திலும் நேற்று தொடர்ந்து மழை பெய்தது. மாவட்டத்தில் பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்): பாப்பிரெட்டிப்பட்டி 74, அரூர் 48, பென்னாகரம் 32, ஒகேனக்கல் 23, பாலக்கோடு 12.4, மாரண்டஅள்ளி 10, மொரப்பூர் 9, தருமபுரி 5.5 மி.மீ.