எதிர்க்கட்சித் தலைவருக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என முதல்வர் கூறுவதா? - முன்னாள் அமைச்சர் காமராஜ் தாக்கு


அரியலூர்: தமிழக முதல்வர் பொறுப்பற்ற முறையில் எதிர்க்கட்சித் தலைவர்களை பேசி வருவது, அவர் ஏதோ ஒரு நெருக்கடியில் உள்ளார் என உணர்கிறோம் என அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

அரியலூரில், அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை.ராஜேந்திரன் மகள் திருமணம் டிச.6-ம் தேதி நடைபெறுகிறது. திருமண விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கிறார்.

திருமணத்தையொட்டி, அரியலூர் அடுத்த கொல்லாபுரம் பகுதியில் திருமண மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதனை இன்று(நவ.02) பார்வையிட்டு ஆய்வு செய்த, முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தமிழக முதல்வர் கூறுவது, முதல்வருக்கு அழகல்ல.

விவசாயிகள் மற்றும் பொது மக்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்வது என்பது எதிர்க்கட்சிகளின் கடமை. அந்த கடமையை ஒவ்வொரு நாளும் செய்து கொண்டிருக்க கூடிய எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு, முதல்வர் இவ்வாறு சொல்லி இருப்பது என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அனைவரும் முகம் சுழிக்க கூடிய வகையில்தான் இந்த பதிலை மக்கள் பார்க்கிறார்கள்.

இதில் முதல்வருக்கு ஏதோ ஒரு நெருக்கடி இருப்பதாக உணர்கிறோம். தொடர்ந்து அவர் பொறுப்புணர்வோடு பதில் சொல்ல வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதில் அவருக்கு பொறுப்புணர்வு இல்லையோ என்ற அச்சம் அனைவரிடமும் இருந்து வருகிறது. முதல்வருக்கு அரசியல் நெருக்கடியாக இருக்கலாம், அரசு நெருக்கடியாக இருக்கலாம் அல்லது கட்சி நெருக்கடியாக இருக்கலாம். இது குறித்து முதல்வரிடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.

ஆய்வின் போது, முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், அமைப்புச் செயலாளர் ஆசைமணி, முன்னாள் எம்பி ஆ.இளவரசன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், இளம்பை தமிழ்செல்வன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

x