திமுக அரசால் மக்கள் உறக்கத்தை தொலைத்துள்ளனர் - கிருஷ்ணகிரி ஆய்வில் இபிஎஸ் குற்றச்சாட்டு


கிருஷ்ணகிரி: திமுக அரசு சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால், மக்கள் உறக்கத்தை தொலைத்துள்ளனர். இதற்கு திமுக அரசே பொறுப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்ககரை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் மழை பெய்துள்ளது. புயலின் தாக்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் 51 செமீ மழை பெய்துள்ளது. கனமழையால் ஊத்தங்கரை தாலுகா, போச்சம்பள்ளி தாலுகா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை நகரையொட்டிய ஏரியில், மழைநீர் வெள்ளம் உபரியாக வெளியேறி பேருந்து நிறுத்தத்தை சூறையாடியுள்ளது. இதனால் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. மொத்தமாக 50 வாகனங்கள் அடித்து செல்லப்பட்டு பள்ளத்தில் கிடக்கிறது. 50 வாகனத்தை சீர்படுத்த அதிக தொகை செலவு ஆகும். பலரின் வாழ்வாதாரம் இந்த வாகனங்களை நம்பியே உள்ளது. இப்போது சபரிமலை சீசனில் வாகனங்கள் இந்த இழப்பை சந்தித்துள்ளது. இதற்கான நிவாரணத்தை திமுக அரசு வழங்க வேண்டும். இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள், அதிக பணத்தை செலவு செய்து வாகனத்தை வாங்கியுள்ளனர். அவர்களின் இழப்பு மிகப்பெரியது. இதனால் அரசு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இங்குள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். கரையோர பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

சென்னை மக்கள் உறக்கம் தொலைத்த அரசு அதிமுக என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் முன்வைத்தார். அவர் கூறிய சில மணிநேரத்திற்குள், அவர் தலைமையிலான திமுக அரசு சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால், விழுப்புரம் மக்கள் உறக்கத்தை தொலைத்துள்ளனர். இதற்கு திமுகவே பொறுப்பு.

போச்சம்பள்ளி, ஊத்தங்கரை தாலுக்காக்களில் நெல், பருத்தி சாகுபடி செய்திருந்த விவசாயிகளின் விளைபயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது. வருவாய்த்துறை, வேளாண் துறை அதிகாரிகளை அனுப்பி வைத்து, உடனடியாக பயிர்சேதங்களை முழுமையாக கணக்கிட்டு விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

x