தென்காசி: வடகரை அருகே தோட்டத்தில் உள்ள தொழுவத்தில் கன்றுக்குட்டியை அடித்து கொன்ற சிறுத்தை அதனை சிறிது தொலைவுக்கு இழுத்துச் சென்றுள்ளது. மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சிறுத்தை, கரடி, யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. பயிர்களை வன விலங்குகள் சேதப்படுத்தி வருவதால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வன விலங்குகள் தொல்லைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். வடகரை அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது.
அடுத்தடுத்த நாட்களில் சில பசு மாடுகளை சிறுத்தை அடித்து கொன்றது. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து, 2 இடங்களில் வனத்துறையினர் கூண்டு அமைத்து, சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை. இந்நிலையில், இன்று வடகரை அருகே மீண்டும் கன்றுக்குட்டி ஒன்றை வன விலங்கு கடித்து கொன்று, சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளது.
வடகரையைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவருக்கு சொந்தமான தோட்டம் வடகரை அருகே குறவன்பாறை என்ற இடத்தில் உள்ளது. அங்கு உள்ள தொழுவத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். இன்று காலையில் தோட்டத்துக்கு சென்றபோது, உடலில் காயங்களுடன் கன்றுக்குட்டி ஒன்று இறந்து கிடந்தது. வன விலங்கு அதனை கடித்து, இழுத்துச் சென்று சிறிது தூரத்தில் போட்டிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், சிறிது தொலைவில் அங்கு பதுங்கியிருந்த விலங்கு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. அதன் உடலில் வரிகள் காணப்பட்டதாகவும், அது புலி என்றும் அதனை பார்த்த விவசாயிகள் கூறுகின்றனர். இந்த பகுதியில் இதுவரை புலி நடமாட்டம் இல்லாத நிலையில் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் வனச்சரக ஊழியர்கள் விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
வனச்சரக ஊழியர்கள் கூறியதாவது, "சிறுத்தையின் கால்தடம் சிறியதாக இருக்கும். ஆனால் இந்த பகுதியில் மழை பெய்து ஈரமான பகுதியில் கண்டறியப்பட்ட விலங்கின் கால்தடம் புலி கால்தடம் போல் பெரியதாக உள்ளது. எனவே அது புலியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கும் ஏற்பட்டது. ஆனால் மற்ற இடங்களில் காணப்பட்ட கால்தடம் சிறிதாகவே இருந்தது. கன்றுக்குட்டியை சிறுத்தை தான் கொன்றுள்ளது.
சமீபத்தில் சிறுத்தையை பிடிக்க 2 கூண்டுகள் வைக்கப்பட்டன. அவற்றில் சிறுத்தை எதுவும் சிக்காததால் அவை அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டன. இந்நிலையில், மீண்டும் கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கியுள்ளதால் மீண்டும் கூண்டுகள் அமைத்து, அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.