கரூர்: ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு தொடக்கம்


கரூர்: ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு தொடங்கியது. டிச. 8ம் தேதி வரை நடைபெறுகிறது.

கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும் 627 ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 67 விற்பனையாளர்கள் மற்றும் 6 கட்டுநர்கள் என மொத்தம் 73 காலி பணியிடங்களுக்கு கடந்த மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. விற்பனையாளர் பணியிடங்களுக்கு 4,454, கட்டுநர் பணியிடங்களுக்கு 497 என மொத்தம் 4,951 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.

ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று (டிச. 2ம் தேதி) தொடங்கி வரும் 7ம் தேதி வரை 6 நாட்களும், கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு டிச. 8ம் தேதி ஒரு நாளும் நடைபெறுகிறது. கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி விற்பனையாளர் பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு கூட்டுறவு கரூர் மண்டல இணைப்பதிவாளர் ப.கந்தராஜா தலைமையில் இன்று (டிச. 2ம் தேதி) தொடங்கியது. கல்லூரி கலையரங்கத்தில் 8 மேஜைகளில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்றது.

சான்றிதழ்கள் சரிபார்ப்பு முடிந் தவர்களுக்கு 16 போர்டுகள் மூலம் நேர்முகத்தேர்வு நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வந்திருந்த பெண்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தனி நேர்முகத் தேர்வு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு 16 போர்டில் எந்த போர்டு ஒதுக்கப்ப ட்டுள்ளதோ அந்த அலுவலர்கள் மாற்றுத் திறனாளி நேர்முகத் தேர்வு அறைக்கு வந்து நேர்முகத் தேர்வு செய்தனர். மேலும் கர்ப்பிணிகளுக்கும் தரைதளத்திலே நேர்முகத் தேர்வு நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் காலை 400, மதியம் 400 பேர் என 800 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வுக்கு குழந்தைகளுடன் வந்த தாய்மார்களின் குடும்பத்தினர் குழந்தைகளுடனும், மற்றவர்களுடன் வந்தவர்களும் கல்லூரி வளாகத்தில் காத்திருந்தனர்.

x