வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகப் பெய்த தொடர் மழை காரணமாக ஒடுகத்தூர் அடுத்த உத்திரகாவிரி ஆற்றில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகக் கன முதல் மிக கன மழை பெய்தது.
தொடர் மழை காரணமாக வேலூர் மாவட் டத்தில் நேற்று நிலவரப்படி வேலூரில் 19 மி.மீ., அணைக்கட்டு 26.90, காட்பாடி 16.80. கே.வி.குப்பம் 21.80, குடியாத்தம் 10.10, பேரணாம்பட்டு 8.60 என மொத்தமாக 103.20 மி.மீ., அளவுக்கு மழையளவு பதிவாகி இருந்தது. கனமழை காரணமாக குடியாத்தம் நகராட்சியில் சுப்பிர மணி என்பவரின் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில், யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.
ஜவ்வாதுமலைத் தொடரில் பெய்த தொடர் கனமழை காரண மாக அணைக்கட்டு வட்டம், மேல் அரசம்பட்டு அருகே தீர்த்தம் பகுதியில் உருவாகும் உத்திர காவிரி ஆற்றிலும், நாகநதி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக மேல் அரசம்பட்டு, ஒடுகத்தூர், கோவிந்தம் பாடி, அகரம், குருவராஜ பாளையம், நாகேந்திரபுரம், பாலப்பட்டு உள்ளிட்ட வழியோர கிரா மங்களில் ஆற்றின் கரையோரங் களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், சுற்று வட்டார கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கால் கத்தாரிக்குப்பம் - கெங்கசானி குப்பம் - வண்ணாந்தாங்கள், கொண்டத்தூர், ஒடுகத்தூர் - நேமந்தபுரம், கிருஷ்ணன்பாறை - ஆர்ஜாதி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் 4 தரைப்பாலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக குருவராஜ பாளையம் முதல் பாலப்பாடி செல்லும் சாலையிலுள்ள தரைப்பாலம் தடையமே இல்லாமல் மழை நீரால் அடித்துச் செல்லப் பட்டது. இதனால், அங்குப் பாது காப்பு கருதி தரைப்பாலங்களின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து காவலர்கள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர்.
இடைவிடாமல் பெய்த மழை யால் ஒடுகத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஏக்கர் விளை நிலங்களில் பயிரிட்டிருந்த வாழை, நெல், மஞ்சள், தானிய பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘உத்திர காவிரி ஆற்றில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள், தானிய வகைகள் சேத மாகியுள்ளன. 4 தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. எங்குப் பார்த் தாலும் வெள்ளக்காடாகக் காட்சி யளிக்கிறது. இதையெல்லாம் அதிகாரிகள் சரி செய்து தர வேண்டும்’’ என்றனர்.