புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களும், புதுச்சேரியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ. மழை கொட்டியதால், பல பகுதிகள் வெள்ளக்காடாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 30-ம் தேதி மாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அப்போது, 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்றுடன் அதிகனமழை கொட்டியது.
போக்குவரத்து நிறுத்தம்: தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, புதுச்சேரியில் பல முக்கிய சாலைகள் நீரில் மூழ்கின. புதுச்சேரி நகரின் மைய பகுதியான வெங்கடா நகர், தென்றல் நகர், சாரம் உள்ளிட்ட பகுதிகள் மழைநீரால் சூழ்ந்து தனி தீவுகள்போல மாறியுள்ளன. கடலூர் - புதுச்சேரி சாலையில் தண்ணீர் ஆறுபோல ஓடுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் அப்பகுதிக்கு சென்று பொதுமக்களை படகு மூலம் மீட்டனர். மீட்பு பணிகளில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை காரிசன் பட்டாலியன் பிரிவை சேர்ந்த இந்திய ராணுவ படையினர் புதுச்சேரி வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர், ஜீவா நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இந்திய கடலோர காவல் படையினர், பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வம்புபட்டு ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால், புதுச்சேரி - விழுப்புரம் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் பல கி.மீ. தூரம் சுற்றி செல்கின்றன. புதுச்சேரியில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 48.4 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது.
இதேபோல, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பாதிக்கப்படும் மக்களை தங்கவைக்க மாவட்டம் முழுவதும் 850 தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பலத்த சூறைக்காற்று, கனமழை காரணமாக சுமார் 30 மணி நேரமாக மின்விநியோகம் தடைபட்டுள்ளது. ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர கிராமங்களில் தண்ணீர் புகுந்தது.விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ. மழை பெய்துள்ளது. வானூர், மரக்காணம், திண்டிவனத்தில் 40 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது.
கடலூர், கள்ளக்குறிச்சி: கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டியதால் அண்ணா விளையாட்டு அரங்கம், வில்வநகர், பாதிரிக்குப்பம், பெரிய கங்கணங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வீடுகளில் மழை நீர் புகுந்தது. தேசிய, மாநில பேரிடர் மீட்புபடையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் வீராணம் ஏரி நிரம்பியது. ஏரியின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், மடம்பூண்டி, திருப்பாலபந்தல், கலயநல்லூர், மணலூர்பேட்டை உட்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீட்பு நிவாரண பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. விழுப்புரம், கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மயிலம், திண்டிவனத்தில் மழை பாதிப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினார்.