வழக்கமான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை; சென்னை தத்தளிக்கவும் இல்லை: முதல்வர் ஸ்டாலின்


சென்னையில் வழக்கமாக தண்ணீர் தேங்கும் இடங்களில் தற்போது தேங்கவில்லை. சென்னை தத்தளிக்கவும் இல்லை. நிம்மதியாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கொளத்தூர் தொகுதியில் புயல்பாதிப்புகளை ஆய்வு செய்தபின், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் உரையாடினார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஃபெஞ்சல் புயலால் சென்னையில் கனமழை பெய்தாலும் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மழைநீர் தேங்கவில்லை. சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் 21 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. 32 நிவாரண முகாம்களில் 1,018 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இன்று (டிச.1) வரை 9.10 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. 386 அம்மா உணவகங்களில் 1 லட்சத்து 7,047 பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பதிவாகி உள்ளது. அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் க.பொன்முடியுடன் எஸ்.எஸ்.சிவசங்கர், வி.செந்தில் பாலாஜியும் அனுப்பப்பட்டுள்ளனர். கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் ஆகியோர் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். மேலும் விழுப்புரத்துக்கு, நீர்வளத்துறை செயலர் மணிவாசன் தலைமையில், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆல்பி ஜான் வர்கீஸ், கிரன் குராலா, பொன்னையா, சிவராசு ஆகியோர் அடங்கிய குழுவும் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் 2 மாவட்டங்களில் பாதிப்புகளை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையும் அனுப்பியுள்ளேன். விழுப்புரத்துக்கு மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 12 குழுக்கள் விரைந்துள்ளன. கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்புகளை சீரமைக்கவும், நிவாரணம் வழங்கவும் தேவையான நிதி வழங்கவும் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்கவும் மத்திய அரசை கேட்டுக்கொள்ள இருக்கிறோம். இன்று (டிச.1) திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சியில் மழை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த மாவட்ட அலுவலர்களையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில்கள்: மழை இன்னும் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து கொண்டு வருகிறது. முழுமையாக நிற்கவில்லை. ஓரளவு மழை குறைந்த பின்பு தான் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல், பயிர் சேதத்தை கணக்கிட்டு இழப்பீடு தொகை எப்படி வழங்க வேண்டும் என்பது குறித்து பிறகு முடிவு செய்வோம். எனவே நாளை (இன்று) தலைமைச் செயலகத்தில், சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் பேசி முடிவு எடுத்து, அதன் பின் மத்திய அரசுக்கு தெரிவிப்போம். பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவைப்பட்டால் நானும் செல்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கொளத்தூரில் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியது: சென்னையில் வழக்கமாக தண்ணீர் தேங்கும் இடங்களில் தற்போது தேங்கவில்லை. சென்னை தத்தளிக்கவும் இல்லை. நிம்மதியாக உள்ளது. புயலை ஓரளவு கணிக்க முடியும். வானிலை அறிக்கையே தவறு என்று கூற முடியாது. மழை வெள்ள பாதிப்புகளுக்கு ஓரளவு நிரந்தரத்தீர்வு ஏற்பட்டுள்ளது. அதிகப்படியான மழை வரும்போது கூடுதல் கவனம் தேவைப்படுகிறது.

குற்றச்சாட்டு வைப்பதே எதிர்க்கட்சித் தலைவருக்கு வேலையாக உள்ளது. அதை நாங்கள் மதிப்பதில்லை. எங்களை பொறுத்தவரை அனைவருக்குமான அரசாக செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்

x