வளர்ச்சி என்பது எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என்று மதுரையில் நடந்த இளம் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் யங் இந்தியா அமைப்பு சார்பில் இளம் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் மதுரையில் நேற்று நடைபெற்றது. தலைமை வகித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
தலைமைப் பண்பு, புதிய சிந்தனை, கண்டுபிடிப்புகளில் இந்தியா உலகத்துக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இளம் தலைமுறையினர் வாழ்க்கையில் முன்னேறும் வகையில், புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு நம்பிக்கை, புதிய உந்துதலை தரும். இதன் மூலம் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை கற்கும் மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும்போதே தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அக்னி வீரர், கேலோ இந்தியா போன்ற திட்டங்கள் இளைஞர்களிடையே ஒழுக்கம், உடல் ஆரோக்கியம், நேர்மையான சிந்தனைகளை வளர்க்க உதவுகிறது. ரஷ்யா - உக்ரைன், ஹமாஸ் - இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நடக்கும் போர், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம்தான் நிற்கும். குறிப்பாக, வன்முறைக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் இருக்கும்.
தமிழ்நாடு சிறப்பாக வளர்ந்துள்ளது. எனினும், தற்போதும்கூட வறுமையிலிருக்கும் வீடுகள் உள்ளன. ஜிடிபி-ஐ மட்டும் முன்வைத்து வளர்ச்சி என்று குறிப்பிட முடியாது. வளர்ச்சி என்பது எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும். இளம் தொழில்முனைவோரின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்களிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார். கருத்தரங்கில், ஒருங்கிணைப்பாளர் சூரஜ் சுந்தர சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து இளம் தொழில்முனைவோருடன் ஆளுநர் கலந்துரையாடினார்