ஆவடி: அம்பத்தூரில் ஃபெஞ்சல் புயலால் அறுந்து சாலையில் கிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை- அம்பத்தூர், மேனாம்பேடு, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (27). ஆவடியில் உள்ள மின்சாதனங்கள் விற்பனையகத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கு கலைவாணி என்ற மனைவி, இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு பால் வாங்குவதற்காக வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் 'ஃபெஞ்சல்' புயலால் அறுந்து சாலையில் விழுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல், விக்னேஷ் மிதித்துள்ளார். அப்போது, மின் கம்பியிலிருந்து கசிந்த மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவலறிந்த அம்பத்தூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து, விக்னேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புயல், மழையால் சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பி குறித்து மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், மின்சார வாரிய ஊழியர்கள் துரித நடவடிக்கை எடுக்காததால் விக்னேஷ் உயிரிழந்தாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.