புதுச்சேரியில் புயலால் பயிர்கள் பெரும் சேதம்: ஏக்கருக்கு ரூ.50,000 வழங்க விவசாயிகள் கோரிக்கை


பயிர்கள் கடும் பாதிப்பு

புதுச்சேரி: புயலால் சாகுபடி பயிர்கள் கடும் பாதிப்படைந்துள்ளதால் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரத்தை விவசாயிகள் சங்கத்தினர் தர கோரியுள்ளனர்.

புதுச்சேரியில் புயலால் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் செல்ல முடியாத நிலை உள்ளது. பல இடங்களில் மரங்கள் கீழே விழுந்துள்ள நிலையில், அதை அப்புறப்படுத்தி வருகின்றனர். அதைவிட அதிகமாக பயிரிடப்பட்ட பயிர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இது தொடர்பாக புதுச்சேரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலர் ரவி கூறுகையில், ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியை கடுமையாக தாக்கி கோர தாண்டவம் ஆடி கரையைக் கடந்து சென்றுள்ளது. இதன் காரணமாக இரண்டு நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது.

கன மழையினால் புதுச்சேரி முழுவதும் வெள்ளகாடாக மாறி உள்ளது. விவசாயிகள் பயிரிட்டுள்ள நிலங்கள் அனைத்தும் மழை நீரால் மூழ்கிப் போய் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகளுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நிலப்பரப்புகளை முதல்வர் ரங்கசாமி, விவசாயத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், ஆட்சியர், வேளாண் அதிகாரிகள் பார்வையிடவேண்டும். இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

x