கோமுகி அணையில் இருந்து உபரி நீர் 5300 கன அடி தண்ணீர் இன்று பிற்பகல் வாக்கில் திறந்துவிடப்பட்டுள்ளது.
கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 46 அடியாகும். இதன் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீரை சேமித்து வைத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாகவே பருவம் தவறி பெய்யும் மழையினால், அணை நிரம்பி, விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதும் மாறி வருகிறது.
பெஞ்சல் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழையின் காரணமாக கல்வராயன் மலை நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து பொட்டியம், கல்படை, மாயம்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு வினாடிக்கு 5300 கன அடி வரை தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என்பதால், கோமுகி அணையிலிருந்து 5300 கன அடி தண்ணீர் உபரி நீராக ஆற்றின் மிகை போக்கி மற்றும் அணையின் பிரதான ஷட்டர் வழியாக வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்வள ஆதார பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.