சென்னை: கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். எனினும், மெட்ரோ ரயில் சேவையும், மாநகரப் பேருந்து சேவையும் வெகுவாக கைகொடுத்தன.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் மழை நீர் புகுந்து, மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை நேற்று காலை தாமதமாக தொடங்கினாலும் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்பட்டன. இதேபோல, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட மார்க்கங்களில் மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.
இதனிடையே, பல்லாவரத்தில் ரயில் தண்டவாளத்தில் மழை நீர் புகுந்ததால், மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், ரயில் சேவை நேற்று மதியம் ஒரு மணி நேரம் தாமதமாகின. அதன்பிறகு, கடற்கரை - தாம்பரம் இடையே நேரடி ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.
தாம்பரத்துக்கு புறப்பட்ட மின்சார ரயில்கள் பல்லாவரத்தில் நிறுத்தப்பட்டது. அதேபோல, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்பட்ட மின்சார ரயில் வண்டலூர் வரை மட்டும் இயக்கப்பட்டன. புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நேற்று நண்பகல் 12.15 முதல் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தண்டவாளத்தில் தேங்கிய மழை நீர், பலத்த காற்று காரணமாக, ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
தடையின்றி இயங்கிய மெட்ரோ: சென்னையில் மெட்ரோ ரயில்கள் பெரிய அளவில் பாதிப்பு இன்றி நேற்று வழக்கம்போல இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் நிம்மதியடைந்தனர். இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்கள் நேற்று வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்பட்டன. பெரிய அளவில் பாதிப்பும் இல்லாமல், முழு அளவில் இயக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் போதிய முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. பயணிகளுக்கான தகவலை, சமூக வளைதளத்திலும் உடனுக்குடன் வெளியிட்டோம்.
கடந்த காலத்தில், கனமழையில் தண்ணீர் தேங்கியதை கருத்தில் கொண்டு, அரும்பாக்கம், பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையங்களின், வாகன நிறுத்தங்களில் மழை நீர் தேங்கும். எனவே, பயணிகள் இந்த இரு மெட்ரோ ரயில் நிலையங்களிலும், வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி நெடுஞ்சாலை இருந்து நடைமேம்பாலத்தை பயன்படுத்தி கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் செல்ல அறிவுறுத்தி உள்ளோம். பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக, வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும்படிக்கட்டு இயக்கப்பட வில்லை. இதுதவிர சில மெட்ரோரயில் நிலையங்களில் நகரும்படிக்கட்டு, மின்தூக்கிகள் இயக்கப்பட வில்லை. பயணிகளை படிக்கட்டுகள் வழியாக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகர பஸ்கள் இயக்கம்: சென்னையில் நேற்று 70 சதவீத மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. கனமழையால் வடபழனி, தியாகராய நகர், பிராட்வே, திருவான்மியூர், தாம்பரம், வியாசர்பாடி, அடையாறு, சைதாப்பேட்டை, பட்டினம்பாக்கம், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, ஆவடி, அம்பத்துார், பெரம்பூர், செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் மழைநீர் தேங்கியது.
இந்தச் சூழலிலும் சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் நேற்று காலை முதல் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டன. அத்தியாவசிய தேவையை தவிர்த்து பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அரசு அறிவுறுத்திய நிலையில், பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன. பெரிய அளவில் பாதிப்பு இல்லாத பிரதான வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன. மழைநீர் தேங்காத சாலைகளில் மட்டுமே தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட்டன. கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேருந்துகளின் இயக்கம் கண்காணிக்கப்பட்டு நடத்துநர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் இருந்த பயணிகளின் வசதிக்காக சென்ட்ரல், பிராட்வே, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் ஆகிய பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விமான நிலையத்தில் இருந்து விரைவில் அனைத்து நாட்களிலும் பேருந்து சேவை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.