சென்னை: சென்னை, புறநகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். முன்னெச்சரிக்கையாக பல்வேறு இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.
சென்னையில், ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் பெரும்பாலான பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வடபழனி 100 அடி சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் நடுப்பகுதியில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. கோயம்பேட்டை சுற்றியும் மழைநீர் தேங்கியது. ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையம் அருகே குளம்போல் மழைநீர் தேங்கியிருந்தது.
அசோக் நகரில் 10-வது நிழற்சாலை, 16-வது நிழற்சாலை, நடேசன் சாலை, பாரதிதாசன் காலனி, விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெரு, இளங்கோ நகர், எம்எம்டிஏ காலனி பிரதான சாலை, கமலா நேரு நகர், மேற்கு மாம்பலம் லட்சுமி தெரு, ராஜாஜி தெரு, கிருபாசங்கரி தெரு, புஷ்பவதி அம்மாள் தெரு, ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெரு, பிருந்தாவன் தெரு, லட்சுமிநாராயணன் தெரு, துரைசாமி சாலை, கிரி சாலை, ராஜமன்னார் தெரு, ஹபிபுல்லா சாலை, கோபாலபுரம் முதல் தெரு, அவ்வை சண்முகம் சாலை, கே.கே.நகர் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியிருந்தது.
போக்குவரத்து மாற்றம்
மேத்தா நகர் வட அகரம் சாலையில் மழைநீர் பெருமளவு தேங்கியதால் நெல்சன் மாணிக்கம் சாலையிலும் சூளைமேடு பகுதியிலும் தடுப்புகள் வைத்து போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. சூளைமேடு திருவள்ளுவர்புரம் 2-வது தெருவில் கனமழையால் தண்ணீர் பெருமளவு தேங்கியதால் அப்பகுதியில் சிறிதுநேரம் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
கூவம் ஆற்றில் மழை நீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஆர்ப்பரித்து ஓடியதால் மதுரவாயல் மேம்பாலத்தின் கீழே உள்ள நொளம்பூர் தரைப்பாலம் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. அப்பகுதியில் போலீஸார் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. இதனால் பெங்களூரு புறவழிச்சாலை மற்றும் மதுரவாயல் புறவழிச்சாலையை அடைய வேண்டிய கனரக வாகனங்கள் அடையாளம்பட்டு, மாந்தோப்பு சாலை, அயனம்பாக்கம் மற்றும் முகப்பேர் மேற்கு, நொளம்பூர் வழியாக திருப்பி விடப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூவம் கரையோரங்களில் வசித்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். முக்கிய சாலைகளில் குளம்போல தேங்கியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சித்ரகுளம் நிரம்பி வழிந்ததால், குளத்துக்கு செல்லும் வழிகள் மூடப்பட்டன. குளங்கள் முழுவதும் மூடுபனி படர்ந்திருந்தது. எழும்பரில் லட்சுமிபதி ருக்மணி சாலையில் இருந்த டிரான்ஸ்பார்மரில் நேற்று திடீரென தீப்பொறி கிளம்பி தீப்பற்றி எரிய தொடங்கியது. தேனாம்பேட்டை சீதாம்மாள் காலனியில் 7 தெருக்களில் நீர் தேங்கியது.
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி, கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கீழ்க்கட்டளை பகுதிகள், பெரம்பூர் நெடுஞ்சாலை, ஸ்டீபன்சன் சாலை, ராயபுரம் முனுசாமி தோட்டம், ஆண்டியப்பன் தெருக்களில் மழைநீர் தேங்கியதால் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். பட்டாளம் பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையை சுற்றி மழைநீர் தேங்கியது.
இதற்கிடையே, ராயபுரம், தியாகாராயநகர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளின் மேம்பாலங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தினர். புளியந்தோப்பில் உள்ள அரசு மதுபானக் கடையில் குவிந்த மக்கள் கூட்டம், சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியது. மேலும், ஆபத்தை உணராமல் கடற்கரையில் கபடி விளையாடியது, புயலை வேடிக்கை பார்ப்பது போன்ற செயல்களிலும் மக்கள் ஈடுபட்டனர். இதுபோன்ற செயல்பாடுகளாலும் மழைநீர் தேங்கியதாலும் மெரினா கடற்கரை லூப் சாலை மூடப்பட்டது.
ரயில் சேவை பாதிப்பு
தண்டவாளத்தில் மழை நீர் புகுந்ததால், விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று காலை வந்த சில விரைவு ரயில்கள் 5 முதல் 10 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தன.
மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று மதியம் வந்த வைகை விரைவு ரயில் உள்பட சில விரைவு ரயில்கள் அரைமணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்தன. இதனால் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர். இதுபோல, சென்ட்ரல் வந்தடைந்த விரைவு ரயில்களும் சிறிது தாமதமாகின.
ரயில் ரத்து, சேவையில் மாற்றம்
இதற்கிடையே, பலத்தமழை காரணமாக, பேசின்பாலம் - வியாசர்பாடி இடையே ரயில்வே பாலத்தை ஒட்டி, மழை நீர் நிரம்பியதால் பல விரைவு ரயில்களின் சேவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டன. அதன்படி, சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டைக்கு நேற்று 5.55 மணிக்கு புறப்பட வேண்டிய ஏலகிரி விரைவு ரயில் (16089) ரத்து செய்யப்பட்டது.
திருப்பதி - சென்னை சென்ட்ரலுக்கு நேற்று இயக்கப்பட்ட சப்திகிரி விரைவு ரயில் (16054), மற்றும் கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்ட லால்பாக் விரைவு ரயில்கள் (12680) ஆவடியில் நிறுத்தப்பட்டன.
மைசூர் - சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்ட விரைவு ரயில் (12610), லோக்மான்யதிலக் டெர்மினஸ் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (12163) ஆகியவை திருவள்ளூரில் நிறுத்தப்பட்டன. மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் (22638) அரக்கோணத்தில் நிறுத்தப்படும்.
சென்னை சென்ட்ரல் - திருப்பதிக்கு நேற்று மதியம் 2.25 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் (16053), திருவள்ளூரில் இருந்து புறப்பட்டது. சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூருக்கு நேற்று மதியம் 2.35 மணிக்கு புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி விரைவு ரயில் (12679) ஆவடியில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
அதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து வெவ்வேறு நகரங்களுக்கு புறப்பட வேண்டிய 9 விரைவு ரயில்கள் திருவள்ளூர் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டன. இதுதவிர, இரண்டு ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. ரயில்களின் சேவை மாற்றத்தால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
விமான நிலையம் மூடல்
விமான சேவை பல மணி நேரம் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மோசமான வானிலை நிலவியதால், அபுதாபியில் இருந்து 151 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க முடியாமல், பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. சிங்கப்பூர், துபாய், திருச்சி, கோவை, டெல்லி, கோழிக்கோடு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட விமானங்களும் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. பின்னர், ஹைதராபாத், திருச்சி, பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.
இதேபோல, 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. நேற்று பகல் 2 மணிக்கு மேல் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸின் சிறிய ரக விமானங்கள் (ஏடிஆர்) அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையே, பயணிகளின் பாதுகாப்பு கருதி, பகல் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. இரவு 7 மணிக்கு பிறகு வானிலை சீரானதும் வழக்கம்போல விமான சேவை தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். விமான நிலையத்துக்கு முன்கூட்டியே வந்த 500-க்கும் மேற்பட்ட பயணிகள், வளாகத்திலேயே காத்திருந்தனர். விமான புறப்பாடு, வருகையில் ஏற்படும் தாமதம் குறித்து விமான நிலையம், விமான நிறுவனங்கள் தரப்பில் முறையாக அறிவிக்கவில்லை என்று பயணிகள் தெரிவித்தனர்.