மழை நிவாரண மையங்கள் மூலம் 2.32 லட்சம் பேருக்கு உணவு: துணை முதல்வர் உதயநிதி தகவல்


சென்னை: சென்னை மாநகராட்சியில் இயங்கிவரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அதைத்தொட ர்ந்து வடசென்னை பேசின் பாலம் அருகேயும் கல்யாணபுரத்திலும் பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய், காந்தி கால்வாய். ரயில்வே கிராஸ் ஓவர் கால்வாய்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்படுவதையும் ஆய்வு செய்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியதாவது: சென்னையில் நேற்றிரவு (நவ.29) நள்ளிரவு முதல் மி.மீ அளவுக்கு சராசரியாக 110 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இதனால் சென்னையில் 334 இடங்களில் நீர் தேங்கியுள்ளது. அதில் 12 இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்ட நிலையில் மீதமுள்ள இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் 6 சுரங்கப் பாதைகளில் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 27 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் 329 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் இருந்து 193 பேர் அழைத்துவரப்பட்டு 8 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிவாரண மையங்களுக்கு மக்களை அழைத்துவர 103 படகுகளும், 120 சமையல் கூடங்களும் தயார் நிலையில் உள்ளன. நிவாரண மையங்கள் மூலம் இதுவரை காலை உணவு 8,500 பேருக்கும், மதிய உணவு 2.23 லட்சம் பேருக்கு என மொத்தம் 2.32 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தவிர சென்னையில் உள்ள 386 அம்மா என்று உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மழைவெள்ள மீட்பு பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என 22 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். புயல் கரையை கடக்கும் போது, அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. எனவே பொது மக்கள் அச்சமும், பதற்றமும் அடைய தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார். ஆணையர் குமரகுருபரன். எம்எல்ஏக்கள் சுதர்சனம், பரந்தாமன், தாயகம் கவி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலர் தாரேஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x