சென்னை உட்பட 7 மாவட்டங்களில் இன்று 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


புயலால் கனமழை பெய்த சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று 500 மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.

ஃபெஞ்சல் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைநீர் தேங்கி தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இம்மாவட்டங்களில் இன்று மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுதொடர்பாக நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புயல் காரணமாக ரெட் அலர்ட் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள் டிச.1-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படும். இதில் சென்னையில் மட்டும் 200 மருத்துவ முகாம்களும், மற்ற 6 மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்களும் நடைபெறவுள்ளன. இந்த மருத்துவ முகாம்கள் தேவைக்கேற்ப எண்ணிக்கை அதிகரிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்மருத்துவ முகாம்களில் காய்ச்சல், சளி பரிசோதனை, ரத்த கொதிப்பு , நீரழிவு நோய்க்கான பரிசோதனை போன்ற அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மருந்துகள், உப்பு - சர்க்கரை கரைசல், நிலவேம்பு குடிநீர், சேற்றுப்புண் மருந்து போன்ற அத்தியாவசிய மருந்துகள் தேவைக்கு அதிகமாக கையிருப்பில் வைத்துக்கொள்ள மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பிடங்களுக்கு அருகே அமைக்கப்பட உள்ள மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

x