மின் இணைப்பின்றி இருளில் வாழ்ந்த மலை கிராம மக்களுக்கு உதவிய தவெக!


சொக்கன்அலை வன கிராம மக்களின் வீடுகளுக்கு மின்இணைப்புக்கான வைப்புத் தொகை ரசீதை ஒப்படைத்த தவெக.நிர்வாகிகள்.

பெரியகுளம்: பல ஆண்டுகளாக மின்வைப்புத் தொகை செலுத்த முடியாமல் சொக்கன்அலை மலைகிராம மக்கள் இருளிலே வசித்து வந்தனர். இந்நிலையில் இத்தொகையை தமிழக வெற்றி கழகத்தினர் செலுத்தினர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை அணை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது அகமலை. இந்த ஊராட்சியில் கண்ணக்கரை, சொக்கன்அலை, அலங்காரம், பட்டூர், சூழ்ந்தகாடு, மருதையனூர், கானாமஞ்சி, வாழைமரத்தொழு, ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை,குறவன்குழி உள்ளிட்ட பல்வேறு வனகிராமங்கள் போடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியாகும்.

இருப்பினும் இங்கிருந்து பாதை வசதி இல்லாததால் அனைத்து தேவைகளுக்கும் பெரியகுளத்துக்கே சென்று வருகின்றனர். இதில் சொக்கன்அலை கிராமத்தில் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசினால் 35 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இருப்பினும் மின்இணைப்பு கொடுக்கவில்லை.

இதுகுறித்து இக்கிராம மக்கள் பல வருடங்களாக மாவட்ட நிர்வாகத்திடமும், போடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மனு கொடுத்து வந்தனர். இந்நிலையில் வைப்புத்தொகை செலுத்தினால் மின்இணைப்பு வழங்கப்படும் என்று மின்வாரியம் தெரிவித்து வந்தது. இங்குள்ளவர்கள் கூலித்தொழில் செய்பவர்கள். இத்தொகையை செலுத்த முடியாததால் இருளிலே வசித்து வரும் நிலை இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தினர் மலைவாழ் மக்களுக்கு உதவ முன் வந்தனர். மாவட்டத் தலைவர் பாண்டி சம்பந்தப்பட்ட கிராம மக்களை சந்தித்து பேசினார். இதன்படி வைப்புத் தொகை செலுத்துவதற்கான ஆதார், வீட்டு வரி உள்ளிட்ட ஆவணங்கள் 15 வீடுகளில் தயாராக இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வீடுகளுக்கான வைப்புத் தொகை ரூ.81 ஆயிரத்தை மின்வாரியத்தில் செலுத்தி இதற்கான ரசீதை சம்பந்தப்பட்ட குடும்பத்திடம் ஒப்படைத்தார்.

மீதம் உள்ள வீடுகளுக்கு முழுமையான ஆவணம் கிடைத்ததும் வைப்புத் தொகை செலுத்துவதாக தெரிவித்தனர். இதுகுறித்து வனகிராம மக்கள் கூறுகையில், “மாவட்ட நிர்வாகத்திடமும், அரசியல்வாதிகளிடமும் பலமுறை அலைந்து பரிதவித்துவிட்டோம். இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள உதவி எங்கள் வாழ்வின் இருளை அகற்றி உள்ளது” என்றனர்.

x