சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு 7 மணி நிலவரப்படி, புதுச்சேரிக்கு கிழக்கு - வடகிழக்கே 60 கி.மீ தொலைவில் உள்ள ஃபெஞ்சல் புயலின் வேகம் மணிக்கு 7 கி.மீ ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி வந்த ஃபெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயலின் முன் பகுதி கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 3 அல்லது 4 மணி நேரங்களில் புயல் முழுமையாக கரையை கடந்துவிடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் 70 முதல் 80 கி.மீ வேகத்திலும் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடிய புயலாக கிட்டத்தட்ட மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை ஒட்டிய காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது. புயல் கடற்கரையை நெருங்கும்போது அதன் நகரும் வேகம் குறையும். புயல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருந்தது. இதனிடையே, வடதமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, இன்று (நவ.30) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாளை (டிச.1) விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் அதி கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று (நவ.30) ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (டிச.1) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.