கரூர் மாவட்ட டாஸ்மாக் மதுபாட்டில்களில் க்யூஆர் கோடு: ஸ்கேன் செய்து பில் போடப்பட்டு விற்பனை!


கரூர்: கரூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் மதுபாட்டில்களில் க்யூஆர் கோடு அச்சிடப்பட்டுள்ளன. விற்பனையாகும் பாட்டில்களை ஸ்கேன் செய்து பில்லுடன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

தனியார் வசமிருந்த மதுபான கடைகள் கடந்த 2003ம் ஆண்டு நவ. 29ம் தேதி முதல் தமிழ்நாடு வாணிபக்கழகம் (டாஸ்மாக்) மூலம் அரசே மது விற்பனையை ஏற்று நடத்தி வருகிறது. டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், விற்பனை செய்யும் மதுபானத்திற்கு முறையால் பில் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக நிலவி வருகிறது.

கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து, வாடிக்கையாளர்களுக்கு பில் வழங்கும் விதமாக மதுபான பாட்டில்களில் க்யூஆர் கோடுடன் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. விற்பனையின்போது விற்பனையாளர்கள் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து பில்லுடன் மதுபானங்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னோட்டமாக காஞ்சிபுரம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் க்யூஆர் கோடுடன் கூடிய மதுப்பாட்டில்களை ஸ்கேன் செய்து பில்லுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக கரூர் மாவட்டத்தில் க்யூஆர் கோடுடன் கூடிய மதுபாட்டில்கள் டாஸ்மாக் தொடங்கப்பட்டு 22ம் ஆண்டு தொடக்க நாளான நேற்று தொடங்கியது.

மாவட்டத்தில் உள்ள 87 டாஸ்மாக் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் கேட்கும் மதுபான பாட்டிலை அவருக்கு வழங்குவதற்கு முன்பு பணத்தை பெற்றுக்கொண்டு க்யூஆர் ஸ்கேன் கருவி மூலம் பாட்டிலில் உள்ள க்யூஆரை ஸ்கேன் செய்து உடனே பில்லிங் கருவி மூலம் அந்த மதுபான தொகைக்கான பில் எடுக்கப்பட்டு வாடிக்கையாளரிடம் பில்லுடன் மதுபானம் வழங்கப்படுகிறது.

இதனையொட்டி கடைகளுக்கு கடந்த 27ம் தேதி முதல் க்யூஆர் ஸ்கேனுடன் கூடிய மதுபான பெட்டிகள் கடைகளுக்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம் ஒவ்வொரு கடைக்கும் தனித்தனி க்யூஆர் ஸ்கேன் உள்ளதால் குறிப்பிட்ட பெட்டிகள், குறிப்பிட்ட கடைக்கு மட்டுமே அனுப்பப்படும். மேலும் 87 கடைகளுக்கு க்யூஆர் ஸ்கேன் கருவி, பில்லிங் கருவி வழங்கப்பட்டுள்ளன. பில்லுடன் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

x