கடலூர்: கடலூரில் உயர்மின் கோபுர விளக்குகள் புயல் முன்னெச்சரிக்கையாக இறக்கப்பட்டுள்ளன. உயர் கோபுரம் மின்விளக்குகள் இறக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
ஃபெஞ்சல் புயல் இன்று (நவ.30) மாலை கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூரில் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.
அதன்படி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடலூர் மாநகராட்சி நகரப் பகுதிகளில் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை, வண்ணாரபாளையம், மஞ்சகுப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 16 உயர் கோபுர மின்விளக்குகளை இறக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.