தேனியில் இரண்டாம் போக சாகுபடிக்கான உழவுப் பணிகள் மும்முரம்: மண்மணம் வீசும் வயல்வெளிகள்


உத்தமபாளையம்: தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக சாகுபடிக்காக உழவுப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மண்மணத்துடன் கூடிய விவசாயப் பணிகள் பலரையும் கவர்ந்து வருகிறது.

தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்கில் முல்லை பெரியாறு அணை நீர் மூலம் இரண்டு போக சாகுபடி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 14ஆயிரத்து 707ஏக்கர் நிலங்கள் பலன்பெறுகின்றன. கடந்த மாதம் முதல்போக சாகுபடி பணிகள் அனைத்தும் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் போகத்துக்காக வயல்களை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக வயலில் கெட்டியாக உள்ள மண்ணை முதற்கட்ட உழவு மூலம் புரட்டி விடப்படுகிறது. அடுத்த கட்டமாக மண்கட்டிகள் உடைக்கப்பட்டு மட்டப்படுத்தப்பட்டு வருகின்றன. பல நிலங்களில் தற்போது 3-ம் கட்ட உழவு நடைபெற்று வருகிறது. இதற்காக வயலில் நீர் தேக்கி சேறுகலக்கி இயந்திரம் மூலம் வயலின் தளம் சமப்படுத்தப்படுகிறது. இறுதிகட்ட உழவு முடிந்த நிலையில் நாற்று நடுவதற்காக வயல்கள் தயார் நிலையில் உள்ளன.

இதற்காக வயலின் சிறுபகுதியில் நாற்றுக்கள் பாவப்பட்டுள்ளன. ஒரு ஏக்கருக்கு 18 முதல் 20 கிலோ நெல் விதைகள் தூவப்பட்டு தற்போது துளிர்களாக வளர்ந்துள்ளன. இதில் புழு, பூச்சிகளை உண்பதற்காக கொக்குகள் அதிகளவில் வருகின்றன. இதில் இருந்து தற்காப்பதற்காக வெள்ளைக்கொடி கட்டி அசைவுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆங்கூர்பாளையம், மார்க்கையன்கோட்டை, உத்தமபாளையம், ராயப்பன்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையிலே இந்நிலங்கள் அதிகம் உள்ளன. தற்போது நிலத்தை தயார்செய்யும் பணி நடைபெறுவதால், மண்மணத்துடன் உழவுப்பணிகளையும் வாகனத்தில் செல்பவர்கள் பலரும் ரசித்துச் செல்லும் நிலை உள்ளது.

x