சென்னை அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவசமாக உணவு - முதல்வர் அறிவிப்பு


சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், கேஎன் நேரு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, “ ஃபெஞ்சல் புயல் இன்றிரவு கரையைக் கடக்கும் என்று தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், சென்னை மாநகர ஆணையர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு, அங்குள்ள நிலவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அந்தப் பகுதியில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தோம். நிவாரண முகாம்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் மக்களும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவும் வழங்கப்பட்டுள்ளது.

இன்றிரவு புயல் கரையைக் கடக்கும்போது, நிச்சயமாக மழை கடுமையாக இருக்கும் என்பதால், முழுமையான நிவாரண நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன். பிற மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், அந்தந்த பகுதிகளுக்கான பொறுப்பு அமைச்சர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து இதுவரை எந்தவொரு அசம்பாவிதமான செய்திகள் வரவில்லை. அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது” என்று கூறினார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், மழைக் காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்தவும், மின் கட்டமைப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சீரமைக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாருர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்கள், திரையரங்குகள் இன்று மூடப்பட்டுள்ளன.

ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையம் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியிருப்பதால் நண்பகல் 12 மணிவரை இரவு 7 மணி வரை விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புறநகர் மின்சார ரயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சி சார்பில் 329 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன.

x