மழைநீர் வடிகால்; திமுக அரசின் போட்டோஷூட்கள் எல்லாம் வெற்று விளம்பரங்கள் - இபிஎஸ் குற்றச்சாட்டு


சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்துவருகிறது. மக்கள் அனைவரும் சென்னை வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை

எனவே, எனது அறிவுறுத்தலின்படி, அதிமுக ஐடி விங் சார்பில் ரேபிட் ரெஸ்பான்ஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளை கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாருர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்கள், திரையரங்குகள் இன்று மூடப்பட்டுள்ளன.

ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையம் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியிருப்பதால் நண்பகல் 12 மணிவரை இரவு 7 மணி வரை விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புறநகர் மின்சார ரயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

x