புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரைச் சாலையான ஈ.சி.ஆரில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தற்போது மாலை கரையைக் கடக்கலாம் என்று கணித்துள்ளது. புதுச்சேரி அருகே கரையைக் கடக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புயலின் காரணமாக புதுச்சேரியில் கனமழை பெய்யவும், காற்று வீசவும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கிழக்கு கடற்கரைச்சாலையில் போக்குவரத்து முடங்கியது. பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி பி.ஆர்.டி.சி. உயர் அதிகாரிகள் கூறும்போது, "புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரைச்சாலை, பைபாஸ் சாலை வழியாக பிஆர்டிசி பஸ்கள் செல்லும். இன்று மக்களும் அதிகளவில் வரவில்லை. மொத்தமாக 14 பஸ்கள் செல்லும். ஆனால் இன்று காலையில் மட்டும் 4 பஸ்கள் சென்றன.
தற்போது கிழக்கு கடற்கரைச்சாலையில் பஸ்கள் செல்லவில்லை. அதேபோல் காரைக்காலுக்கு 9 பஸ்கள் செல்லும் ஒரு பஸ் மட்டுமே சென்றுள்ளது. அப்பகுதியிலும் போக்குவரத்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது" என்றனர்.
பிஆர்டிசி பஸ்கள் மட்டுமில்லாமல் தமிழக அரசு பஸ்களும் புதுச்சேரியிலிருந்து இருந்து சென்னைக்கு செல்வது ஈசிஆரில் நிறுத்தப்பட்டுள்ளது.