‘அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம்’ - மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!


சென்னை: இன்றிரவு புயல் கரையைக் கடக்கும்போது, நிச்சயமாக மழை கடுமையாக இருக்கும் என்பதால், முழுமையான நிவாரண நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன். அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்றிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், கேஎன் நேரு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, “தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசு அது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனைத்து விதமான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறது. நேற்றிரவு கடுமையான மழை பெய்திருக்கிறது. தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. ஃபெஞ்சல் புயல் இன்றிரவு கரையைக் கடக்கும் என்று தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், சென்னை மாநகர ஆணையர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு, அங்குள்ள நிலவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டோம். அந்தப் பகுதியில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தோம். நிவாரண முகாம்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் மக்களும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான உணவும் வழங்கப்பட்டுள்ளது. இன்றிரவு புயல் கரையைக் கடக்கும்போது, நிச்சயமாக மழை கடுமையாக இருக்கும் என்பதால், முழுமையான நிவாரண நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன். பிற மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், அந்தந்த பகுதிகளுக்கான பொறுப்பு அமைச்சர்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து இதுவரை எந்தவொரு அசம்பாவிதமான செய்திகள் வரவில்லை. அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது.

சென்னை தி.நகரில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கவில்லை. இப்போது அந்தப் பகுதிகளில் தண்ணீர் வடிந்து கொண்டிருக்கிறது. எனவே, ஒன்றும் பிரச்சினை இல்லை. சென்னையில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்குமோ, அந்த இடங்களில் எல்லாம் நாங்கள் முன்கூட்டியே, மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட காரணத்தால், இப்போதுவரை எந்த பிரச்சினையும் இல்லை. ஒருவேளை பிரச்சினைகள் வந்தாலும் அதை சமாளிப்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாருர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புயல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்கள், திரையரங்குகள் இன்று மூடப்பட்டுள்ளன.

x