சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: சமூகநீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்புசெய்ய “சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதைப் பெறுவோருக்கு ரூ.5லட்சம் விருது தொகையும்,ஒரு பவுன் தங்கப்பதக்கமும்,தகுதியுரையும் வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் “சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்க உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூகநீதிக்காகபாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன்பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகளை உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தை சென்னை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பங்கள் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூகநீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள் வரும் டிச.20-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து சேர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.